வாக்கு எண்ணிக்கையின் விதிமுறைகள், முகவர்கள் கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வு
election news

தூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை குறித்த விதிமுறைகள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், 2024ம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பாக 36. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4ம் தேதிஅன்று நடைபெற உள்ளது தொடர்பாக வாக்கு எண்ணிக்கை குறித்த விதிமுறைகள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடனான ஆய்வுக் கூட்டம் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிதேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்தில், சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குகள் எண்ணும் முகவர்களை நியமனம் செய்தல், நியமனம் செய்யப்படும் முகவர்களுக்கான தகுதிகள், சட்டமன்ற தொகுதிவாரியாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்கு எண்ணும் முகவர்கள் செல்ல வேண்டிய நுழைவாயில் விபரங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் முகவர்கள் எவ்வாறு அமரவேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. சட்டமன்ற தொகுதிவாரியாக வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு தேநீர் மற்றும் உணவு ஏற்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தின் போது ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக அனைவரும் சுமூகமான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்ற கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
ஆய்வுக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன், பிஜேபி மாவட்ட துணைத்தலைவர் சிவராமன், வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர் இளம்பாிதி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, தெற்கு மாவட்ட திமுக ஓன்றிய செயலாளர் ஜெயக்கொடி, வழக்கறிஞா் கிருபாகரன், நாம் இந்தியர் கட்சி மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், தெற்கு மாவட்ட அதிமுக துணைச்செயலாளர் சந்தனம், அதிமுகவை சேர்ந்த சங்கர், ஐயப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன் மற்றும் அரசுஅலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.