டாஸ்மாக் கடையில் தமிழக முதல்வர் போட்டோ ஒட்டியதாக தூத்துக்குடியில் 3 பாஜகவினர் கைது
bjp news

தமிழகத்தில் மதுபான கொள்முதல் செய்த வகையில் சுமார் ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடந்திருப்பதாக பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரத்தில் அந்த துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக தமிழக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டாஸ்மாக் கடையை முற்றுகை செய்யபோவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை உள்பட தமிழக பாஜக நிர்வாகிகள், தொண்டர்களை போலீசார் போராட்டம் நடத்தவிடாமல் முன்னதாகவே வீடுகளில் வைத்து கைது செய்தனர். கைது நடவடிக்கையில் போலீசார் முறையாக நடந்து கொள்ளவில்லை. பாஜகவினர் அலைக்கழிக்கபட்டனர் என்றும் இரவு ஏழுமணி வரை விடுவிக்காமல் காத்திருக்க செய்தனர் என்றும் பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதனை தொடர்ந்து மாநில தலைவர் அண்ணாமலை, ’இனிமேல் எந்த வித முன் அறிவிப்போ, அனுமதியோ இல்லாமல் டாஸ்மாக் முற்றுகை போராட்டம் நடக்கும்’ என்று தெரிவித்தார். அதன் பிறகு தமிழகத்தில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் ஆங்காங்கே டாஸ்மாக் கடைகளுக்கு முன்பாக உள்ள சுவர்களில் பாஜகவினர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டோக்களை ஒட்டினர். தமிழக அரசுக்கு எதிராக பாஜகவினர் கோஷங்கள் எழுப்பினர்.
அதன்படி தூத்துக்குடி 2ம் கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டோவை பாஜகவினர் ஒட்டினர். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி வடபாகம் போலீசார், தூத்துக்குடி மாவட்ட பாஜக மகளிரணி பொதுச்செயலாளர் லதா, ஆன்முக பிரிவு மாவட்ட செயலாளர் ஓம் பிரபு, கிழக்கு மண்டல் துணைத்தலைவர் லட்சுமி வேல்கனி கொறையரா ஆகியோரை கைது செய்தனர். இச்சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.