தமிழகத்தில் மாற்றம், மீண்டும் பிரதமராக மோடி - 2 நோக்கத்தோடு கூட்டணியில் சேர்ந்துள்ள பாமக

BJP - PMK

தமிழகத்தில் மாற்றம், மீண்டும் பிரதமராக மோடி - 2 நோக்கத்தோடு கூட்டணியில் சேர்ந்துள்ள பாமக

இந்தியா விடுதலை பெற்றதை தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் இருந்து வந்த கட்சிகளிடமிருந்து மாற்றம் வேண்டும் என்று பல அரசியல் கட்சிகள் பல ஆண்டுகளாக கோஷம் எழுப்பி வருகின்றன. அதில் ஒன்று பாமக. தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று குரல் எழுப்பும் அக்கட்சி அந்த இடத்தை பாமக பிடிக்க வேண்டும் என்றும் கூறிவருகிறது. இதேபோல் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் திமுக, அதிமுகவிடமிருந்து மீட்க வேண்டும், தேசிய கட்சி தமிழகத்தை ஆளவேண்டும் என்று நோக்கத்துடன் காய் நகர்த்தி வருகிறது பாஜக. 

பாஜகவும், பாமகவும் தனக்கான இடத்தை பிடிக்க தற்போது இணைந்துள்ளதாகவே தெரிகிறது. கடந்த சில வாரங்களாக கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த கட்சி எங்கே இருக்கிறது என்று திமுக கூட்டணி கட்சிகளை தவிர மற்ற கட்சியினரை கணிக்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கூட அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் இருந்த பாமக, திடீரென பாஜகவோடு கை கோர்த்துள்ளது. சேலத்தில் இன்று 19.03.2024) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் மேடையேறினர் பாமக நிறுவனர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணி ராமதாஸும். அப்போது அன்புமணி, தமிழகத்தில் மாற்றம், மீண்டும் பிரதமராக மோடி வரவேண்டும் அர்த்தத்தில் பேசியிருக்கிறார். 

பத்து தொகுதிகளை தரவேண்டும், மேல்சபை எம்.பி தரவேண்டும், அமைச்சராக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளுக்கு இடையில் அடுத்து வர கூடிய சட்ட மன்ற தேர்தலில் பங்கு கேட்டிருப்பார் போல் தெரிகிறது. தமிழகத்தில் மாற்றம் என்பது அன்புமணி அவ்வப்போது கூறிவரும் வார்த்தைத்தான் என்றாலும், தற்போது அமைந்துள்ள கூட்டணியை வெற்றிக் கூட்டணியாகவே பார்க்கின்றனர். நிச்சயமாக மோடிதான் பிரதமர் என்று பெரும்பாலானோர் முடிவு செய்துவிட்டனர். எனவே இப்போதுள்ள கோரிக்கைகள் பெரும்பாலும் ஏற்க கூடியதாக அமைய வாய்ப்பு இருக்கிறது.

அப்படி வரும்போது அடுத்து வரும் சட்ட மன்ற தேர்தலிலும் பாஜகவோடு  பாமக உரிமையோடு கூட்டணி அமைத்துக் கொள்ளும் நிலை வரலாம் என்றே தெரிகிறது. இதுமட்டுமில்லை தற்போதுள்ள கூட்டணி கட்சியினர் அனைவரும் அப்படியே களத்தில் நிற்பர் என்கிறபோது இந்த கூட்டணி இன்னமும்  வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. இதையெல்லாம் உள்வாங்கி கொண்டுதான் அன்புமணி அப்படி சொல்கிறார் போல.