தமிழ் மொழி பேசுவதில் தமிழர்களாகிய நாம் பெருமை கொள்ள வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன்
Minister News

தமிழ் மொழி பேசுவதில் தமிழர்களாகிய நாம் பெருமை கொள்ள வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் நடந்த பொருநை இலக்கிய திருவிழாவைத் தொடங்கிவைத்து பேசினார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி கூட்டரங்கில், பொருநை இலக்கியத் திருவிழா நேற்று தொடங்கியது. இவ்விழாவுக்கு மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். இவ்விழாவினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து பேசியதாவது :
பொருநை இலக்கியத் திருவிழா நமது தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்படுவது நமக்கு சாலப் பொருத்தமாகும். பொருநை நாகரிகம் என்பது எப்போதும் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தைத் தான் கூறுவார்கள். வற்றாத ஜீவ நதி என்று அழைக்கக்கூடிய தாமிரபரணி ஆறு உற்பத்தியாகுவது திருநெல்வேலியாக இருந்தாலும் அது பயணிக்கிற இடமும், கடலோடு கலக்கின்ற இடமும் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் இருக்கிறது. ஆகவே 1986லிருந்து நம்முடைய தூத்துக்குடி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டாலும், இந்த நாகரிகத்தை பொருத்தவரைக்கும், இலக்கியத்தை பொருத்தவரைக்கும் நம்முடைய ஒன்றிணைந்த ஒரு ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டமாக தான் பார்க்கப்படுகிறது என்பதை, புத்தகத்தை வாசிக்கும் போது அதை தெரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களின் விழாவாக இந்த விழா நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழ் மொழி வளர்ச்சி பெறவேண்டும், நம்முடைய பண்பாடு, பாரம்பரியம் மற்றும் பழங்கால வாழ்க்கை முறைகள் எல்லாம் எதிர்கால சமுதாய தலைவர்கள் ஆகிய நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கத்தோடு இந்த பொருநை இலக்கியத் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவதற்காகவும், அதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நம்முடைய தூத்துக்குடி மாவட்டத்தில் கொண்டாடப்படுவது ஒரு பொருத்தமான நிகழ்வு. எனென்றால், முதலாவது பொருத்தம் பொருநை நதிக்கரையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பொருநை நதிக்கரை வரலாறாக நம்முடைய அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சிவகளை, ஆதிச்சநல்லூர் நம்முடைய தூத்துக்குடி மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. இன்றும் அங்கு அகழ்வாராய்ச்சிகள் நடந்து கொண்டு வருகிறது. அந்த காலத்தில் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள், அவர்கள் பயன்படுத்திய உலோகங்கள், தங்க ஆபரணங்கள், நெல்மணிகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் எல்லாம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்னொரு பொருத்தம் நம்முடைய மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தமிழ் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். இலக்கியத் திருவிழா என்றாலே ஒரு உற்சாகத்தோடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டு நிகழ்ச்சியை நல்ல முறையில் நடத்தக்கூடியவர். அவர், மாவட்ட ஆட்சித்தலைவராக இருக்கும்போது இந்நிகழ்வு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறுவதும் சாலப் பொருத்தமாகும்.
பிற மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்கக்கூடிய நமது தாய் மொழியான தமிழ் மொழியை தமிழர்கள் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும். நாம் எல்லாம் தமிழர்கள் தமிழ் மொழி பேசக்கூடியவர்கள் என்று நாம் பெருமை கொள்ள வேண்டும். என்றைக்குமே நம்முடைய மொழி என்கிற ஒரு உணர்வோடு இருக்க வேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவரும் சிறந்த படைப்பாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் போன்றோர்களின் புத்தகங்களை வாசிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய அனுபவ அறிவுகளை நீங்கள் பெற முடியும். எனவே, ஒவ்வொரு மாணவர்களும் சிறந்த படைப்பாளர்களாக எழுத்தாளர்களாக இலக்கியவாதிகளாக உருவாக்க வேண்டுமென்ற உயர்ந்த நோக்கில் இது போன்ற வாய்ப்புகளை தமிழக முதல்வர் ஏற்படுத்தி தந்துள்ளார். ஆகையால் பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற இலக்கியம் சார்ந்த போட்டிகளில் தெரிவு செய்யப்பட்டு இங்கு வந்திருக்கும் அனைத்து மாணவ மாணவியர்களும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன், வரலாற்றுச் சிறப்பு மிக்க புத்தகங்கள் மற்றும் பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து பயன் பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த புத்தகம் மற்றும் நாணயக் கண்காட்சியினை பார்வையிட்டார்.
இவ்விழாவில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா, முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் (அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை) காமாட்சி, எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், பேச்சாளர்கள், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ - மாணவியர் கலந்துகொண்டனர்.