வள்ளலார் சர்வதேச மையம் அமையும் பகுதியில் தொல்லியல் குழு ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு
vallalaar
கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம், சத்திய ஞானசபை பகுதி பெருவெளியில் தொல்லியல் நிபுணர்களைக் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தின் சத்திய ஞான சபை முன்பு இருக்கும் 70 ஏக்கர் பரப்பில் உள்ள பெருவெளியில் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க ஒப்புதல் அளித்து, தமிழக அரசு 2023-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி அரசாணை வெளியிட்டது. பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட உள்ளன என்பது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சர்வதேச மையத்தில் செய்யப்படவுள்ள 16 வகையான வசதிகளை விளக்கி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், சர்வதேச மையம் அமையவுள்ள பகுதியை தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளார். அதில் 17 மற்றும் 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுற்றுச்சுவரின் எச்சங்கள் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் எந்த கட்டுமானமும் நடைபெறவில்லை. பணியின் போது ஏதேனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் கண்டறியப்பட்டால் அவை பாதுகாக்கப்படும் என உறுதி அளித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தால்தான் முறையாக இருக்கும் என்றார். இதை ஏற்றுக் கொண்ட தலைமை வழக்கறிஞர், மூன்று பேர் கொண்ட தொல்லியல் நிபுணர் குழு அமைத்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தொல்லியல் நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வுக்கு மாற்றியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.