ஆளுநர் பேசியதாக போலி செய்தி வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

nadunilai news

ஆளுநர் பேசியதாக போலி செய்தி வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

நம்நாட்டில் மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்படுகிறதோ இல்லையோ, எதிரிகளை கருவிலேயே வீழ்த்தும் அடிப்படை அரசியல் அவ்வப்போது விவாதிக்கப்பது வாடிக்கையாகிவிட்டது. 

நாட்டு நலன், நாட்டு மக்களின் வளர்ச்சி என்பதைபற்றி யோசிக்க வேண்டிய அமைப்பினர், சித்தாந்த போராட்டம் நடத்துவதிலேயே குறியாக இருக்கின்றனர். சொந்த நாட்டின் கலாசாரம், பண்பாடுகளை உயர்த்திபிடிப்பதற்கு பதிலாக அதனை அழிப்பதற்கு பல்வேறு அமைப்பினர் முயற்சி செய்கின்றனர் என்பதை சில நடவடிக்கைகள் மூலம் பார்க்கமுடிகிறது. அதாவது தமிழ், தமிழ் கலாசாரம் என்று பேசிக் கொள்ளும் சிலர், இந்திய தேசியம், பாரத தேசம் என்பதை உச்சரிக்க தயாரில்லை. தமிழையாவது அவர்கள் முழுமையாக உயர்த்திபிடிக்கிறார்களா என்றால், அப்படி பேசிக் கொண்டே ஆங்கிலத்தை உயர்த்தி பிடிப்பதில்தான் அவர்கள் கருத்தாக இருக்கின்றனர். தமிழ் பற்றாளர் அனைவரையும் இப்படி சொல்லவில்லை. சிலரின் அரசியல் அப்படி இருப்பதாக தெரிகிறது. 

தமிழக  ஆளுநர் ஆர்.என்.ரவி, உண்மையான கலாச்சார, தேசியப்பற்றுள்ளவராக இருப்பதை பார்க்க முடிகிறது. அதுவே இங்குள்ள சிலருக்கு பிடிப்பதில்லை. ஆளுநர் என்கிற பதவியே தேவையில்லை என்கிற அளவிற்கு போகிறது இவர்களின் ஆதங்கம். சொந்த கலாசாரம் குறித்து பேசுவதால் ஆளுநருக்கும் தமிழகத்தில் ஆதரவு பெருகி உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் சில அசாதாரணங்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் இடத்தில் ஆளுநர் இருக்கிறார். அப்படியிருக்கும்போது அவர் மீது பழிபோடும் நோக்கத்திலும், விவகாரங்களை திசை திருப்பும் வகையிலும் ஆளுநர் வெளியிட்டதாக ஒரு போலி செய்தி வெளியாகியுள்ளது. 

அதில், தமிழர்களை சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குல தெய்வங்கள்தான். சாராய உயிழிப்புகளுக்கு அடிப்படை காரணமான குல தெய்வ, நாட்டார் தெய்வ, கிராம கோயில் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும் என ஆளுநர் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்த புகார் ஆளுநர் மாளிகைக்கு செல்ல, அங்கிருந்து விளக்கம் அளிக்கபட்டுள்ளது. அதில், தவறான நோக்கத்துடன் பரப்பப் படும் போலி செய்திகளால் மக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் செயல், மாநிலத்தின் மிக உயரிய பதவி வகிப்பவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது. அமைதியின்மையை உருவாக்குகிறது. 

இந்த போலியான தகவலை பரப்பியவர்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் மாளிகை தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இந்த புகார் எதோ கொடுத்தார்கள், எதோ நடவடிக்கை எடுத்தோம் என்றில்லாமல், இதுபோன்று பிரிவினையை ஊட்டும் செய்தியை உருவாக்கி, பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது நாட்டு நிர்வாகத்தில் அக்கறையுள்ள நிர்வாகத்தின் கடமையாகும். அந்த நடவடிக்கை என்பது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கானது மட்டுமில்லை தமிழக ஆளுநருக்கானது. 

- நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்