ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எம்.எல்.ஏ இல்லாமல் நடந்த தீயணைப்பு நிலையம் திறப்பு விழா

Srivaikundam News

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எம்.எல்.ஏ இல்லாமல் நடந்த தீயணைப்பு நிலையம் திறப்பு விழா

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற தொகுதியில் அதிக காலங்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களே இருந்திருக்கிறார்கள். தற்போதும் அதே கட்சியை சேர்ந்த ஊர்வசி அமிர்தராஜ் என்பவரே எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். அதிமுக, திமுக என இரண்டில் எந்த கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்தாலும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கே பெரும்பாலும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சமீபத்திய அரசியல் சூழ்நிலைகளை வைத்து பார்க்கும்போது வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் எந்த கட்சி எந்த கூட்டணியில் இருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகள் அனைத்து தொகுதியையும் தனக்கானதாக பார்த்து வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஸ்ரீவை தொகுதியை திமுகவும் அக்கறையுடன் அனுவருவதாக சொல்கிறார்கள். 

தற்போதுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ அமிர்தாரஜ், அதே தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ஊர்வசி செல்வராஜ் மகன் ஆவார். சென்னை தொழிலதிபர் என்கிற வகையில் வசதி வாய்ப்புகள் கொண்ட எம்.எல்.ஏ என்கிற பெயர் அமிர்தராஜிக்கு இருக்கிறது. அதனால் டெல்லி அரசியல் கூட அவருக்கு எளிதாக இருக்கிறது என்கிறார்கள். தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தின் தலைவராக உள்ள எம்.எல்.ஏவை தொகுதிக்கு வந்தால் காங்கிரஸ் கட்சியினர் பார்க்க விரும்புகின்றனர். வெளியூரில் இருந்து வந்து செல்வதால் அது சிலருக்கு சாத்தியமில்லாமலும் போகிறது. செல்போன் மூலம் தொடர்பு கொள்வது அவ்வளவு எளிது அல்ல. பொதுவாழ்க்கையில் உள்ளவர்தானே என்று போனில் தொடர்பு கொண்டால், வேறு ஒரு போனில் இருந்து அவருடைய பி.ஏ வந்து பேசுவார். குறிப்பிட்ட சிலர் தவிர மற்றவர்கள் எம்.எல்.ஏவை தொடர்பு கொள்வது கடினம் என்று குறைபட்டு கொள்ளும் தொகுதி மக்கள் சிலர், அதேவேளை கட்சியின் மேல் மட்டத்தில் பேசுவது, தமிழக அரசு வட்டாரத்தில் மேல்மட்டத்தில் பேசுவது என்று எம்.எல்.ஏ திறமையாக பேசி காரியம் சாதிக்கிறார் என்கின்றனர். அந்த வகையில் ஏரல் பகுதிக்கு தீயணைப்பு நிலையம் வருவதற்கு முயற்சி செய்திருக்கிறார். தீயணைப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று திறப்பு விழா நடக்கும் போது எம்.எல்.ஏவான ஊர்வசி அமிரதாராஜ், அந்த நிகழ்ச்சியில் இல்லை. அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், அதிகாரிகள்,கட்சியினர் புடை சூழ நின்று தீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்திருக்கிறார். 

தொகுதி எம்.எல்.ஏ கலந்து கொள்ளாமல் நிகழ்ச்சி எப்படி நடைபெற்றது? எதற்காக நடைபெற்றது?. எம்.எல்.ஏ எங்கே போனார்? என்று தொகுதி மக்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.