திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன கட்டணம் அதிகரிப்பு - பக்தர்களின் வருகையை குறைக்கும் சதி என்கிறது பாஜக

Thiruchendur Murugan

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன கட்டணம் அதிகரிப்பு - பக்தர்களின் வருகையை குறைக்கும் சதி என்கிறது பாஜக

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் இரண்டாவது படைவீடாகும். இங்கு நாளுக்குள் நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது சஷ்டி விரதம் கடைபிடிக்கபட்டு வரும் நிலையில் தரிசன கட்டணம் பக்தர்களிடம் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதற்கு எதிராக இந்து முன்னணி அமைப்பினர் நேற்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்து முன்னனியினரை கைது செய்த போலீசார், அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

அந்த அறிக்கையில், தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பாக திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசன கட்டணம் ரூ.1000, 2000 மற்றும் 3000 என்று வசூலிக்கப்படுகிறது. இந்த அநியாய வசூலை தடுக்க அற வழியில் போராடிய இந்துமுன்னணி மற்றும் முருக பக்தர்களை அடக்குமுறையில் கைது செய்த காவல்துறையின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம். 

தமிழக அரசு தாங்கள் வழங்கிய மகளிர் உரிமை தொகை 1000 ரூபாயை பக்தர்கள் மூலமாக அபகரித்து விட வேண்டும் எம்கிற எண்ணத்தில் இந்த கட்டண உயர்வு உள்ளது. சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை கொண்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதை தடுக்கவே தரிசன கட்டண உயர்வை இந்த அரசு நடைமுறைபடுத்தி இருக்கிறது. மன அமைதிக்கும் கடவுளுக்கு நன்றிக்கடன் செலுத்த வரும் ஏழை பக்தர்கள் இந்த கட்டண உயர்வை கண்டு மனம் கொதித்து செல்கின்றனர். நேற்று லட்சக்கணக்கான முருக பக்தர்கள் கோவிலை சுற்றி விரதம் இருந்து கொண்டிருந்த வேளையில் காவல்துறை முருக பக்தர்களையும் இந்து முன்னணி தொண்டர்களையும்  அடித்து கைது செய்ததை முருக பக்தர்கள் கண்டு மன வேதனைபட்டார்கள்.

திருச்செந்தூர் கோவிலில் முருக பக்தர்களுக்கு எதிரான போக்கை அறநிலையத்துறை தொடர்ந்து கடைபிடிக்குமேயானால் முருக பக்தர்களை திரட்டி மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாபெறும் போராட்டம் நடைபெறும் என்பதை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.