திருச்செந்தூர் – திருநெல்வேலி ரயில்வே வழித்தடத்தை இரட்டை வழித்தடமாக மாற்ற பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை

Train News

திருச்செந்தூர் – திருநெல்வேலி  ரயில்வே வழித்தடத்தை இரட்டை வழித்தடமாக மாற்ற பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை

திருச்செந்தூர் – திருநெல்வேலி ரயில்வே வழித்தடத்தை இரட்டை வழித்தடமாக மாற்றி, கூடுதல் லோக்கல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என மாநில பயணிகள் நலச்சங்கம் மத்திய ரயில்வே துறையை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மாநில பயணிகள் நலச்சங்க தலைவர் சாந்தக்குமார் வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே தற்போது உள்ள ஒற்றை ரயில் பாதை காரணமாக, பயணிகள் தேவைக்கு ஏற்ற அளவில் ரயில்கள் இயக்க முடியாத நிலை நீடித்து வருகிறது. எனவே இந்த வழித்தடத்தை உடனடியாக இரட்டை வழித்தடமாக மாற்றி, கூடுதல் லோக்கல் ரயில்கள் இயக்க வேண்டும்.

உடன்குடி அனல் மின் நிலையம் மற்றும் குலசேகரப்பட்டினத்தில் அமைந்துள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் ஆகிய பகுதிகளில், வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதேபோல், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் ரயில் மற்றும் பேருந்து வசதிகள் போதிய அளவில் இல்லை. இதனால் பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் பக்தர்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

எனவே, வருங்கால தேவைகளை கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் திருச்செந்தூர் ரயில் நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும். கூடுதல் ரயில்கள் வந்து செல்லும் வகையில் மேம்படுத்துவதோடு, ரயில்களின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்ற வசதிகளுடன் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும். திருச்செந்தூர் ரயில் நிலையத்தை மேலும் விரிவுபடுத்த தேவையான போதிய இடவசதி இருந்தும், ரயில்வே துறை காலதாமதப்படுத்துவது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

மேலும், தற்போது திருநெல்வேலியில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்களை திருச்செந்தூரிலிருந்து இயக்கினால், வட மாநில தொழிலாளர்களுக்கும், திருச்செந்தூர் வரும் பக்தர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். புதிதாக இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் நாகர்கோவில், திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வழித்தடங்களில் ஏற்கனவே அதிக அளவில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இனி இயக்கப்படக்கூடிய புதிய ரயில்களை திருச்செந்தூரிலிருந்து இயக்கினால், பயணிகள் நலனுக்கு உகந்ததாக அமையும். அதேபோல், திருநெல்வேலியில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில்களுக்கு, திருச்செந்தூரிலிருந்து இணைப்புரயில்கள் இயக்கப்பட வேண்டும். அதிக வருமானம் தரக்கூடிய நிலையமாக உள்ள திருச்செந்தூர் ரயில் நிலையம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஏன் என்று தெரியவில்லை. இதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது. 

எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, திருச்செந்தூர் – திருநெல்வேலி ரயில்வே வழித்தடத்தை இரட்டை வழித்தடமாக மாற்றவும், கூடுதல் ரயில்கள் இயக்கவும், திருச்செந்தூர் ரயில் நிலையத்தை நவீனப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில பயணிகள் நலச்சங்க தலைவர் தனது கோரிக்கை மனுவில் வலியுறுத்தியுள்ளார்.