சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் பறிமுதல் செய்யப்படும் - தூத்துக்குடி மாநகராட்சி கண்டிப்பு உத்தரவு

thoothukudi

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் பறிமுதல் செய்யப்படும் - தூத்துக்குடி மாநகராட்சி கண்டிப்பு உத்தரவு

வீட்டில் வளர்க்கும் மாடுகள் மற்றும் நாய்கள் சாலையில் சுற்றித்திரிவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு சுற்றித்திரியும் மாடுகளும், நாய்களும் திடீரென மக்களை தாக்கிவிடும் சம்பவமும் அவ்வப்போது நடந்துவிடுகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாடுகளை பிடித்து கொட்டில் அடைத்து வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் உரிமையாளர்கள் அதற்கான தண்ட தொகையை செலுத்தித்தான் திரும்ப பெற முடியும். அவ்வாறு பல இடங்களில் நடந்துவிட்டது. ஆனாலும் மாடுகள் ரோட்டில் சுற்றித்திரிவதும் முற்றிலுமாக நின்றபாடில்லை.  

 சென்னையில் தாயுடன் சென்ற 4வது வகுப்பு படிக்கும் மாணவியை குட்டியுடன் சென்ற பசுமாடு ஒன்று முட்டி தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. அதிஷ்டவசமாக மாணவி உயிர் தப்பியிருக்கிறார். சமூகவலைதளங்களில் இச்சம்பவம் குறித்த சிசிடிவி வீடியோவை மக்கள் கொதித்து போனார்கள். படுகாயமடைந்த மாணவி சிகிச்சை பெற்றிருக்கிறார். அவரை அமைச்சர், அதிகாரிகள் பார்த்து ஆறுதல் கூறியதுடன் இதுபோன்று தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும். அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச. தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாநகர பகுதிகளில் போக்கு வரத்திற்கும்  பொது மக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அலைந்து திரியும் கால்நடைகளை உரிமையாளர்கள் தங்களது சொந்த பொறுப்பில் கொட்டில் அமைத்து பராமரிக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது.  எனினும் அறிவிப்புகளுக்கு மாறாக கடந்த ஐந்து மாதங்களில் மாநகர பிரதான வீதிகளில்  அலைந்து  திரிந்த  40  மாடுகள் மாநகராட்சி சார்பாக பிடிக்கப்பட்டு அரசின் அங்கீகாரம் பெற்ற கோசாலையில் ஒப்படைக்கப் பட்ட நிலையில் கால்நடை  உரிமையாளர்களுக்கு  அபராதம் விதிக்கப்பட்டது. 

இருப்பினும், கால்நடை உரிமை யாளர்களால் மாநகராட்சியின் அறிவிப்பினை பொருட்படுத்தாமலும் பொதுமக்களின் நலன் மீது அக்கறை இன்றியும் தொடர்ச்சியாக கால்நடைகள் மாநகர பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகின்றன. எனவே கால்நடைகளை தனியாக கொட்டில் அமைத்து முறையாக பராமரிக்க கால்நடை உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடரும் நிலையில், கால்நடைகள் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டு நிரந்தரமாக  அரசு அங்கீகாரம் பெற்ற கோசாலையில் ஒப்படைக்கப்படுவதுடன் திரும்ப வழங்கப்பட மாட்டாது என  மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.