உலகெங்கும் கோலாகலமாக பொங்கல் விழா – தமிழகமெங்கும் திருவிழா சூழல்

Pongal

உலகெங்கும் கோலாகலமாக பொங்கல் விழா – தமிழகமெங்கும் திருவிழா சூழல்

தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, இந்தியாவைத் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடனும் விமர்சையாகவும் கொண்டாடி வருகின்றனர். கடந்த இரு தினங்களாக போகிப் பண்டிகை, பொங்கல் விழா, திருவள்ளுவர் தினம் மற்றும் உழவர் தினம் ஆகியவை தொடர்ச்சியாக நடைபெறுவதால், தமிழ்நாடு முழுவதும் திருவிழா கோலத்தில் காட்சியளிக்கிறது.

பொங்கல் திருநாளுக்கு மறுநாளான இன்று திருவள்ளுவர் தினமாகவும், மாட்டுப் பொங்கல் நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பாரம்பரிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விமர்சையாக நடைபெற்று வருகின்றன. அலங்கரிக்கப்பட்ட காளைகள், பாரம்பரிய உடைகளில் இளைஞர்கள், உற்சாகத்தில் கூடிய மக்கள் என விழாக்களுக்கான வரவேற்பு மிகுந்துள்ளது.

தமிழக அரசு, போகிப் பண்டிகையிலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியான விடுமுறையை அறிவித்திருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து கிராமங்கள் நோக்கி மக்கள் பெருமளவில் பயணம் செய்தனர். இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு, பயணிகளுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் மக்கள் எந்த சிரமமும் இன்றி தங்கள் சொந்த ஊர்களில் குடும்பத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர்.

இன்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு குளியல், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, விவசாயிகளால் நன்றி தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாக்கள் அனைத்தும் வேளாண்மை தொழிலை அடிப்படையாகக் கொண்டு உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது. சூரியனின் அருளால் வேளாண்மை வளர்ச்சி பெறுகிறது; அதன்மூலம் மனிதர்களின் வாழ்வாதாரமான உணவு கிடைக்கிறது. எனவே சூரியனுக்கு நன்றி கூறும் வகையில், விவசாயிகள் தொடங்கிய இந்த திருநாள், காலப்போக்கில் தமிழர்களின் ஒட்டுமொத்த பாரம்பரிய அடையாளமாக மாறியுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  உள்ளிட்ட அரசியல், நிர்வாக உச்சபட்ச அதிகாரங்களில் உள்ளவர்கள் பொங்கல் விழாவை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்து, விழாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர். கிராமப்புறங்களிலிருந்து நகரங்கள் வரை, வீடுகள், தெருக்கள், கோயில்கள், பொது இடங்கள் அனைத்தும் தற்போது விழாக்கோலத்தில் மிளிர்கின்றன.

இதன்மூலம், பொங்கல் பண்டிகை தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம், வேளாண்மை மரபு மற்றும் சமூக ஒற்றுமையை உலகிற்கு எடுத்துரைக்கும் ஒரு பெரும் திருவிழாவாக மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.