புதுக்கோட்டை ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் - வர்த்தக வளர்ச்சி சங்கம் கோரிக்கை

Varthaga Sangam

புதுக்கோட்டை ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் - வர்த்தக வளர்ச்சி சங்கம் கோரிக்கை

புதுக்கோட்டை, தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள வர்த்தக வளர்ச்சி சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் பெரியசாமி முன்னிலையில், புதுக்கோட்டை ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி – திருநெல்வேலி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புதுக்கோட்டை, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் தலைநகராக விளங்கி வருகிறது. புதுக்கோட்டையை சுற்றி சுமார் 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில், கிராம மக்கள், வணிகர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் தங்கள் அன்றாட தேவைகளுக்காக புதுக்கோட்டையை நம்பி வருகின்றனர். மேலும், தூத்துக்குடி வாகைகுளம் விமானநிலையம் அமைந்துள்ள குமாரகிரி ஊராட்சியும் புதுக்கோட்டை ஊரை உள்ளடக்கிய பகுதியாக உள்ளது. தூத்துக்குடி – திருநெல்வேலி, தூத்துக்குடி – சாயர்புரம் – ஏரல், தூத்துக்குடி – சாயர்புரம் – திருவைகுண்டம், தூத்துக்குடி – வாகைகுளம் – திருவைகுண்டம் ஆகிய முக்கிய வழித்தடங்களில் பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் இரு மார்க்கங்களிலும் வந்து சென்றன. ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டதற்கு பிறகு, திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி நோக்கி வரும் பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வராத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பயணிகள் புதுக்கோட்டை ஊருக்கு வெளியிலேயே இறக்கிவிடப்படும் சூழல் நிலவி வருகிறது.

எனவே புதுக்கோட்டை பழைய பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டி போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்றும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தை சற்று நீட்டித்து அதன் அடிப்பகுதியில் புதிய வழித்தடம் அமைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், புதுக்கோட்டை ஊருக்குள் மீண்டும் பேருந்துகள் வந்து செல்ல வாய்ப்பு ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பெரிதும் பயன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள வர்த்த வளர்ச்சி சங்க ஐம்பெரும் விழா நடைபெற்றது. அதற்கு, சங்க தலைவர் ரூஸ்வெல்ட் ஜெபராஜ் தலைமை வகித்தார். செயலாளர் மாரிமுத்து பட்டன் சங்கத்தின் செயல்திட்ட அறிக்கையை வாசித்தார். துணை தலைவர் பிலிப் ராஜ்குமார் வரவேற்புரை ஆற்றினார்.

பொருளாளர் யோகேஷ்வரன், துணைத் தலைவர் ஜெயகணேஷ், துணைச் செயலாளர்கள் முத்து, ஜெகதீஷ், இணைச் செயலாளர்கள் ஹரிஹரன், முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேயர் என்.பி. ஜெகன் பெரியசாமி, சங்கத்தை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் டாக்டர் தினேஷ் காமராஜ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

விழாவின் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை பி.எஸ். பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளி மற்றும் மங்களகிரி செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், 100 பேருக்கு இலவச வேஷ்டி–சேலை வழங்கப்பட்டு, மூத்த வணிகர்கள் கவுரவிக்கப்பட்டனர். 

மேலும், புதுக்கோட்டை ஊரை புறக்கணித்து பைபாஸ் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்ல வேண்டும். முக்கிய சந்திப்புகளில் உள்ள உயர் கோபுர மின்விளக்குகளை உடனடியாக பழுது பார்த்து எரிய விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

விழாவில் சட்ட ஆலோசகர்கள் முருகன், ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எட்வர்ட் ராஜா, ராஜன், மாரிமுத்து, புதுக்கோட்டை பி.எஸ். பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோப்பர் ஜோதிபால், நல்லாசிரியர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, காலை நேரத்தில் புதுக்கோட்டையில் கண், பல் மற்றும் எலும்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை டாக்டர் வாசன் துவக்கி வைத்தார்.