தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகே போக்குவரத்து நெருக்கடிக்கு விரைவில் தீர்வு – மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு
Thoothukudi
தூத்துக்குடி, டிச.31:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் விவிடி சிக்னல் அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விரைவில் மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்டோர் முன்னிலையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்குப் பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதிகளில் அனைத்து பணிகளும் சீராக நடைபெற்று வருகிறது. மழைக்காலத்தில் 16, 17, 2 ஆகிய மூன்று வார்டுகளைத் தவிர மற்ற பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கழிவுநீர் பம்பிங் மூலம் வெளியேற்றப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முத்துநகர் கடற்கரை பூங்கா, ரோச் பூங்கா, ராஜாஜி பூங்கா, எம்.ஜி.ஆர். பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் பராமரிப்பு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யும் வகையில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டூவிபுரம் சங்கரநாராயணன் பூங்காவில் உள்ள நீர்தேக்கத் தொட்டி சீரமைக்கப்பட்டு, அதன் சுற்றுப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
முத்துநகர் கடற்கரையில் பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில் தனியார் ஒப்பந்தத்தின் கீழ் படகு சவாரி வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 147 ஆண்டுகள் பழமையான தெப்பக்குளம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி 1ம் தேதி நடைபெற உள்ள தெப்பத் திருவிழாவிற்கு முன் பணிகள் முடிந்தால் அனைத்து புறங்களிலும் இருந்து பொதுமக்கள் திருவிழாவை காண அனுமதி வழங்கப்படும் . மாநகரில் அமைக்கப்படும் அனைத்து கழிவுநீர் கால்வாய்களும் சுகாதாரத்தை பேணும் வகையில் மூடப்பட்டு அமைக்கப்படுகிறது. டிஜிட்டல் போர்டுகள் சாலைகளில் வைப்பது தொடர்பாக முழுமையான தடை அல்லது குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மேலும், மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 1ம் தேதி முதல் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் திரியும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு சங்கரன்கோவிலில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும்; அவை உரிமையாளர்களிடம் திரும்ப வழங்கப்படமாட்டாது என எச்சரித்த மேயர், மாநகரில் 1,880 புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. இதுவரை 3 ஆயிரம் புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. விடுபட்ட சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த பகுதிகளில் உடனடியாக சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
மாமன்ற உறுப்பினர்கள் விவிடி சிக்னல் அருகே போக்குவரத்து நெரிசலை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததற்கு பதிலளித்த மேயர், அந்த பகுதியில் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும், அருகிலுள்ள காலியிடங்களை மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு குறைந்த கட்டணத்தில் நிகழ்வுகள் நடத்தும் வகையில் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தற்போது மாநகரில் 53 பூங்காக்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், விரைவில் முதியோர்களுக்கான பூங்காக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் கூறினார்.
இந்த ஆண்டின் கடைசி கூட்டத்தில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த மேயர், “ஒரு வாரம் பொறுத்துக் கொள்ளுங்கள், அதன் பின்னர் பணிகள் தொடங்கி முழுமையாக நிறைவேறும்” என உறுதியளித்து கூட்டத்தை நிறைவு செய்தார்.
கூட்டத்தில் துணை ஆணையர் சரவணக்குமார், மாநகராட்சி பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி பொறியாளர்கள், நகரமைப்பு திட்ட அதிகாரிகள், சுகாதார அலுவலர்கள், மண்டலத் தலைவர்கள் மற்றும் பல மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூடுதல் தகவல்:
தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே கடும் போக்குவரத்து நெருக்கடி –ஆம்புலன்ஸ் தங்கு தடையின்றி செல்ல மாற்று வழி ஏற்படுத்த கோரிக்கை
தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் தினசரி மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருவதால், தூத்துக்குடி மாவட்ட தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட இந்த சிக்னல் அருகே போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிப்பது வழக்கமாகி வருகிறது.
மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு செல்லும் பிரதான வழியாக இந்த விவிடி சிக்னல் இருப்பதால், அங்கு ஏற்படும் நெரிசல் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
முன்னதாக, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், விவிடி சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. மேலும், அப்பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவும் திட்டம் காலதாமதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், தற்போது அந்த மேம்பால திட்டத்தின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில், விவிடி சிக்னல் அருகே ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்லும் வகையில் தனிப்பாதை அல்லது மாற்று வழி ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, நீதிமன்றம் மற்றும் ராஜாஜி பார்க் இடையே மருத்துவமனைக்கு புதிய மாற்று வழி ஏற்படுத்தப்பட்டால், போக்குவரத்து நெருக்கடி பெருமளவில் குறையும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் அந்தப் பகுதியின் போக்குவரத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை என்றும், நோயாளிகளின் சிரமங்களை போக்கவும், ஆம்புலன்ஸ் சேவையை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் பொதுநலவாதிகள் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக விரைவான நடைமுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
nadunilai.com