தூத்துக்குடியில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் - குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மறியல்

murder news

தூத்துக்குடியில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் - குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மறியல்

போதைக்கு எதிராக எத்தனை நடவடிக்கை எடுத்தாலும், எத்தனை விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டாலும் போதையை முற்றிலும் ஒழித்தபாடில்லை. போதையால் கொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து நடந்துள்ள 2 கொலை சம்பவங்களால் தூத்துக்குடியில் பொதுமக்கள் அதிர்ந்துபோய் உள்ளனர்.

தூத்துக்குடி அண்ணாநகர் 8வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் கருப்பசாமி(33). இவர் அங்குள்ள இறைச்சிக் கடையில் வேலைபார்த்து வந்துள்ளார். கருப்பசாமிக்கும், அண்ணாநகர் 9வது தெருவை சேர்ந்த முருகன் மகன் வெங்கடேஷ்(24) என்பவருக்கும் இடையில் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 9ம் தேதி இரவு கருப்பசாமி அண்ணாநகர் 9வது தெருவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெங்கடேஷ் அவரது நண்பர் நிகிலேசன்நகர் முனியசாமி மகன் அரவிந்தன்(21) ஆகியோர் கருப்பசாமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றியதில் அங்கு கிடந்த கல்லை எடுத்து கருப்பசாமியின் தலையில் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த கருப்பசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்றிரவில் இறந்தார். 

இச்சம்பவம் குறித்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷ், அரவிந்தன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தார். 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு தாளமுத்துநகர், மாதாநகர் பகுதியில் இறைச்சி கடை காரர் சந்திரசேகர் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி தாளமுத்துநகர், திரேஸ்நகரை சேர்ந்தவர் சந்திரசேகர்(45). இவர் அண்ணாநகரில் பன்றி இறைச்சிக் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு மாதாநகர் பத்திரகாளியம்மன் கோயில் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 3 நபர்கள் சந்திரசேகரை சரமாரியாக வெட்டினர். படுகாயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை இறந்தார். இது குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழங்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையே இன்று மாலை தூத்துத்துக்குடி அரசு மருத்துவனை முன்பு சந்திரசேகர் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் விற்கப்பட்டு வரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவர்களின் கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் உத்தரவாதம் கொடுத்ததை தொடர்ந்து சாலை மறியல் போரட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் சிறிது நேரம் தூத்துக்குடி - பாளை ரோடு, அரசு மருத்துவமனை முன்புள்ள சாலையில் போக்குவரத்து முடங்கியது. வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்பி வைக்கபட்டது. 

தூத்துக்குடியில் அடுத்தடுத்து நடந்துள்ள கொலை சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ந்து போய் உள்ளனர். போதை பொருட்களின் ஆணி வேரை பிடுங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.