விதிமுறைகளை மீறி கட்டணம் வசூல் செய்யும் அரசு உதவி பெறும் பள்ளிகள் : பாஜக மாவட்ட தலைவர் புகார்

Education News

விதிமுறைகளை மீறி கட்டணம் வசூல் செய்யும் அரசு உதவி பெறும் பள்ளிகள் : பாஜக மாவட்ட தலைவர் புகார்

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல அரசு உதவிபெறும் பள்ளிகள், தமிழக அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விதிமுறைகளை மீறி, சிறப்புக்கட்டணம், கல்வி மேம்பாட்டு நிதி, ஆய்வகக் கட்டணம், பராமரிப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன.

இதனால் தினக்கூலி தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் சிறு வியாபாரிகளைச் சேர்ந்த ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதற்கும், 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்கும் ஆயிரக்கணக்கில் கட்டணம் கேட்டு வற்புறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மேலும் பல கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகள் இல்லாத சூழலில், அரசு உதவிபெறும் பள்ளிகளை மட்டுமே பொதுமக்கள் நம்பி உள்ளதால், இந்த கட்டணச் சுமையால் மாணவர்கள் இடைநிற்றல் நிலைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் கட்டண வசூல் தொடர்பாக தனிப்பட்ட கண்காணிப்பு குழுவை அமைத்து தணிக்கை நடத்தவும், விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியரிடம் சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த மனுவின் நகல் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.