''சனாதனம் குறித்த நடிகர் அர்ஜூன் கருத்து சரியானதுதான்''

Sanaathanam

''சனாதனம் குறித்த நடிகர் அர்ஜூன் கருத்து சரியானதுதான்''

நடிகர் அர்ஜூன் செய்தியாளர்களிடம் பேசும்போது, எனக்கு தெரிந்த அளவில் சொல்லவேண்டுமென்றால் சனாதனம் என்பது வே ஆப் லைப். எப்படி நாம் நடந்து கொள்ள வேண்டும். எப்படி வாழ்க்கையில் இருக்கனும் என்பதை கூறுவது சனாதனமாகும். தப்பு தண்டா பண்ண கூடாது, திருட கூடாது, இன்னொருத்தர் பொருளுக்கு ஆசைப்படாதேனு சொல்கிறது சனாதன தர்மம்.  நாம் குழந்தைகளாக இருக்கும் போது நம்மை தாய், தகப்பன் எவ்வளவு அழகா பார்த்துக்கிறாங்க. வயசான காலத்தில் அவங்களை நாம் கூடவே வைத்து பார்த்துக்கனும். சனாதன தர்மம் இருக்க கூடாதுன்னா அவங்களோட அப்பா, அம்மாவை வெளியே துரத்தட்டும். முடியுமா? சனாதனம் என்பது மதம் கிடையாது. வே ஆப் லைப் எனக்கு புரிஞ்சிக்கிட்ட அளவில் சொல்லிக்கிட்டிருக்கேன். எல்லாரும் புரிஞ்சிக்கிட்டா நல்லா இருக்கும் என்று கூறினார்.  

உடனே அர்ஜூனின் இந்த கருத்துக்கு எதிராக சிலர் சமூக வலைதளங்களில் கொதிக்க ஆரம்பித்துவிட்டனர். தமிழ்நாட்டில் இந்து மத வெறுப்பு, சனாதனம் என்பது தவறானது என்பதுபோல் சித்தரித்து  எதிர்ப்பு அரசியல் செய்வோர் சமூக வலைதளங்களில் அர்ஜூன் கருத்துக்கு எதிராக பதிவு போட்டனர். உடனே அவர்களுக்கு பதில் சொல்லும் வகையிலும், அவர்களின் கருத்தை மிஞ்சிய அளவிலும் நடிகர் அர்ஜூன் கருத்தை ஆதரித்து சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தனர் சனாதன ஆதரவாளர்கள்.  தி.க, திமுகவினர் சனாதன எதிர்ப்பு அரசியல் செய்து வருவது வழக்கம். அந்த வகையில் திமுக முக்கிய தலைவர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின், ஏற்கனவே அரசியல் மேடையிலும், சமீபத்தில் சட்டமன்றத்திலும் சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசினார். அது பெருத்த சர்ச்சையை கிளப்பியது. அதனைத் தொடர்ந்து சனாதன கோட்பாடுகள் பலராலும் ஆராயப்பட்டு வருகிறது. இந்தநிலையில்தான் அர்ஜூனின் பேட்டியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த பிரபஞ்சத்தில் ஒரு கருத்து ஏற்புடையதாக இருக்கலாம், ஏற்புடையது அல்லாததாக இருக்கலாம். இந்த இரண்டு நிலையையும் உணர்ந்தவர்களே சரி  அல்லது தவறு என்று கருத்து சொல்ல தகுதியானவர்களாகும். அந்த வகையில் சனாதனம் குறித்து நடிகர் அர்ஜூன் கூறிய கருத்துக்கள் மிகவும் பக்குவமானதாகும். அது ஏற்புடையதாகும். ஆனால் சிலர் அவரின் கருத்தை ஏற்க கூடாது என்கிற நிலையில் இருந்து கொண்டு சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். வேணுமென்றே விமர்சிக்கின்றனர் அல்லது விபரம் அறியாமல் விமர்சிக்கின்றனர் என்று பக்குவபட்டவர்கள் கடந்துபோய்விடுவர். இப்படி அனைவருமே ஒன்றும் சொல்லாமல் கடந்துபோய்விட்டால், புரியாமல் அல்லது வேணுமென்றே தவறாக கூறுவோரின் வாதமே சரியானது என்றாகிவிடும். எனவே நடிகர் அர்ஜீன் கருத்து முற்றிலும் சரியானது என்பதை நாம் பதிவு செய்கிறோம். சனாதனம் என்கிற வாழ்க்கை  வடிவமைப்பில் நிறை,குறைகளை ஆராயவதில் தவறில்லை. அதற்காக அத்தகைய அமைப்பே இருக்க கூடாது. அதனை பின்பற்றுதலே இருக்க கூடாது என்று வாதிடுவோர் இந்தியாவில் உள்ள மெஜார்டி மக்களின் பழக்க வழக்கங்களை மறுக்கிறார்கள் என்று அர்த்தமாகிவிடும்தானே?