மாறுவோம், மாற்றுவோம் - புதிய வழித்தடத்தில் அண்ணாமலை

Annamalai

மாறுவோம், மாற்றுவோம் - புதிய வழித்தடத்தில் அண்ணாமலை

காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் தமிழ்நாடு முதலமைச்சர் பதவிக்கு வந்துள்ள விஜயின் விஸ்பரூபம் மிக அபரீதமானது. முன்னவர்கள் காலத்தில் எதிரணியில் இருப்போர் சரி நிகரானவர்களாக இருந்தனர். மக்கள் செல்வாக்கு, மக்கள் ஆதரவு  என்பதெல்லாம் அடுத்தடுத்து வந்தவர்களால் சமன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது விஜய் காலம் என்றாகியிருக்கிறது. மிக வலிமையான கூட்டணியை கொண்டிருந்த திமுகவை பலமிழக்க செய்திருக்கிறது விஜயின் தவெக. ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சி என்று பெருமைபேசும் அதிமுகவில் ஒரு பிரிவு தவெகவை நம்பி பிரிந்தும், சேர்ந்தும் தள்ளாடுகிறது. முதல் ஆளாக படகில் ஏறிவிட்ட சந்தோஷத்தில் தவெகவோடு உரிமை கொண்டாடுகிறது காங்கிரஸ். தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி காய் நகர்த்தி வந்தும் புண்ணியமில்லாமல் கதையை ஓட்டி வந்த விசிக, அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சந்தோஷத்தில் பேச்சு சப்தம் வெளியில் கேட்காமல் பேசி வருகிறது. இடது சாரிகள் எப்போதும் போல் ஆளும் கட்சி வரிசையில் இருந்தாலும் போராட்ட களத்திலேயே  இருக்கிறது. தேர்தலில் தோல்வியையும், கூட்டணி கட்சிகளையும் கோட்டை விட்ட திமுக, பெரும்படையை இழந்த மனநிலையில் தவிக்கிறது. திமுக சின்னத்தில் போட்டி போட்டது தப்பா போச்சே என்று கதறிக் கொண்டிருக்கிறது மதிமுக. மற்றவர்களெல்லாம் வேண்டாவதவர்கள் போல் கண்டு கொள்ளாமல் இருந்தபோது வேண்டியதை கொடுத்து ஆதரித்த திமுகவை எந்த வகையிலும் குற்றம் சொல்ல கூடாது என்று மெளனம் காக்கிறது தேமுதிக. நாடாளவிடாமல் காடாள அனுப்பிவிட்டார்களே என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் அர்ச்சுனன் என்கிற சகலகலா வல்லவன் என்பது போல் தனது தனித்துவத்தை நினைத்து திருப்தி கொண்டிருக்கிறது பாமக. தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்க வேண்டும் என்று முயற்சி செய்த அண்ணாமலையை ஒதுக்கிவிட்டு, எதாவது வெற்றி பெற்றால் போதும் என்று அதிமுகவில் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து தோல்வியடைந்து விழி பிதுங்கி நிற்கிறது தமிழக பாஜக. 

இந்தநிலையில் மற்றவர்கள் எல்லாம் முடிந்தார்கள், விஜயின் தவெகவிற்குதான் எதிர்காலம் இருக்கிறது என்கிற கணக்குப்படி அந்த கட்சியை நோக்கி படையெடுக்கிறார்கள் இளைஞர்களும், அனுபவம் வாய்ந்த மாற்றுக் கட்சியினரும். அதிக எண்ணிக்கையுள்ள இளைஞர்கள் பட்டாளத்திற்கு ஐடி கார்டு கொடுக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது தவெக. இதேநிலை நீடித்தால் குற்றம் சொல்ல முடியாத எம்.ஜி.ஆர் போல் விஜய் செயல்பட துவங்கிவிடுவார். அப்படியானால் நல்ல நோக்கத்திற்காக அதிகாரி பதவியை விட்டுவிட்டு வந்த அண்ணாமலையின் அரசியல் கனவு நினைவாகாமல் போய்விட கூடும் என்று நினைக்கின்றனர் அண்ணாமலை ஆதரவாளர்கள். 

சமகாலத்தில் நல்ல புத்தி கூர்மையும், திறமையும், நல்ல நோக்கமும் கொண்டிருக்கும் அண்ணாமலையை பொதுநலவாதிகள் ஏற்க தயாராக இருக்கின்றனர். ஆனால் பாஜக அதற்கு சரியான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவில்லை. எதாவது கூட்டணியில் இருந்து எதாவது எம்ல்.எல்.ஏ, எம்.பிக்களை பெற்றால் போதும் என்கிற மனநிலையில் உள்ள தமிழக பாஜகவில் உள்ள சீனியர்களின் நோக்கம், அண்ணாமலையின் நோக்கத்திற்கு எதிராக இருப்பதாகவே சொல்கிறார்கள். அதனால் பாஜகவில் இருந்து தன்னுடைய லட்சியத்தை அடைய முடியாது என்று கருதியுள்ள அண்ணாமலை  தனியாக இயக்கம் காண முடிவு செய்து பாஜகவில் இருந்து விலகி புதிய இயக்கம் துவங்க போவதாக இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்துவிட்டார். அவரின் அறிவிப்பை பல லட்சம்பேர் ஏற்றுள்ளனர். இது அவருக்கு கிடைத்துள்ள ஆதரவாகும். விரைவில் அவரின் இயக்கத்தின் பெயர் வெளியிடப்படும் என்று தெரிகிறது. மாறுவோம், மாற்றுவோம் என்பதுதான் அண்ணாமலை அறிவித்துள்ள கோஷம்.  

அண்ணாமலையின் இந்த திடீர் அறிவிப்பு சாரை சாரையாக விஜயை நோக்கி சென்று கொண்டிருக்கும் இளைஞர்களை தடுத்து நிறுத்தும் வகையில் இருக்கும் என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள். நுணுக்கம் மற்றும் செயல்திறன் கொண்ட அண்ணாமலையால் நிச்சயம் ஆளும் கட்சியை கேள்வி கேட்க முடியும் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். அதனால் அண்ணாமலை அறிவித்த இணையதளத்தில் தன்னார்வலர்கள் தங்களது அடையாளத்தை ஆர்வமுடன் பதிவு செய்து இணைந்துள்ளனர். மதியம் 12 மணிக்கு மேல் துவங்கிய இந்த பதிவு மாலைன் 6 மணிக்குள் சுமார் 7 லட்சம் பேரை தாண்டியிருக்கிறது. தொடர்ந்து தங்களை இணைத்துக் கொள்ளும் பணியில் தமிழக மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆக, இனிமேல் தமிழகத்தில் விஜய்க்கும், அண்ணாமலைக்கும் இடையேதான் போட்டி இருக்கும் என்பதுபோல் தெரிகிறது.  

அண்ணாமலை கரூர் மாவட்டம் தொண்டம்பட்டி கிராமத்தில் குப்புசாமி - பரமேஸ்வரி தம்பதியருக்கு ஜூன் 4, 1984-ல் மகனாகப் பிறந்தார். கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சாமானிய விவசாய குடும்ப பின்னணியை சேர்ந்த இவர், கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற பிஎஸ்ஜி (PSG) தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை 2007-ல் முடித்தார். இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான IIM Lucknow கல்லூரியில் 2010-ம் ஆண்டு MBA முடித்து பட்டம்பெற்றார்.

இந்தியாவின் மிகக் கடினமான UPSC தேர்வில், தனது முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று, கர்நாடகா கேடரில் ஏஎஸ்பி அதிகாரியாக 2011-ல் பணியில் இணைந்தார். அகிலா சுவாமிநாதன் என்பவருடன் 2013-ல் இவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். போதைப்பொருள் ஒழிப்பு, சட்டவிரோத கும்பல் ஒடுக்குமுறை போன்ற அதிரடி நடவடிக்கைகளால் கர்நாடக மக்கள் மத்தியில் "சிங்கம்" என்று பாராட்டப்பட்ட அண்ணாமலை உடுப்பி மாவட்ட எஸ்.பி-யாக 2015-ல் பதவி உயர்வு வழங்கப்பட்டது. கர்நாடகாவின் முக்கியப் பகுதியான பெங்களூர் தெற்கு பிரிவின் துணை ஆணையராகப் (DCP) 2018-ல் பொறுப்பேற்றார்.

மக்களுக்கு நேரடியாகச் சேவை செய்யவும், இயற்கை விவசாயத்திற்குத் திரும்பவும் தனது ஐபிஎஸ் பதவியை விருப்ப ஓய்வு (VRS) மூலம் மே 2019-ல் ராஜினாமா செய்தார். கரூர் சொந்த கிராமத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, கிராமப்புற இளைஞர்களின் தலைமைத்துவத்தை வளர்க்க We The Leaders என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை 2019 - 2020 காலகட்டத்தில் தொடங்கினார்.

டெல்லியில் முரளிதர் ராவ் மற்றும் எல். முருகன் முன்னிலையில் ஆகஸ்ட் 25, 2020-ல் முறைப்படி பா.ஜ.க-வில் இணைந்தார். அடுத்த சில வாரங்களிலேயே மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2021-ல் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு 38.71% வாக்குகள் பெற்றார். எனினும், தி.மு.க வேட்பாளரிடம் சுமார் 89,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

தமிழ்நாடு பா.ஜ.க-வின் மிக இளம் வயது மாநிலத் தலைவராக ஜூலை 16, 2021-ல் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார். அண்ணாமலை கட்டியிருந்த ரபேல் வாட்ச் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ஏப்ரல் 2023-ல் அதற்கான பில்களை வெளியிட்டார். தி.மு.க பிரமுகர்களின் சொத்துப்பட்டியல் மற்றும் ஆடியோக்களை "DMK Files" என்ற பெயரில் 2023 வெளியிட்டார். இதன் காரணமாக பல்வேறு அவதூறு வழக்குகளைச் சந்தித்தார்.

2023 - பிப்ரவரி 2024 வரை அமித் ஷா தொடங்கி வைத்த 'என் மண் என் மக்கள் நடைப்பயணம்' மூலம் தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளை நடந்து கடந்தார். பிப்ரவரி 2024-ல் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்துடன் இது நிறைவடைந்தது. அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதா பற்றிய அண்ணாமலையின் விமர்சனங்களால் 2023-ல் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அதிகாரப்பூர்வமாக முறிந்தது.

2024-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, 32.79% வாக்குகள் பெற்றார். எனினும், தி.மு.க வேட்பாளரிடம் 1,10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை எதிர்த்து, 'தி.மு.க ஆட்சியை வீழ்த்தும் வரை காலணி அணிய மாட்டேன்' என டிசம்பர் 2024-ல் சபதமேற்று 48 நாட்கள் வெறும் காலோடு சவுக்கடி போராட்டம் நடத்தினார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஃபெல்லோஷிப் படிக்க அமெரிக்கா சென்ற அண்ணாமலை, பின்னர் தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்காலம் முடிய, தலைவர் பதவி நீட்டிக்கப்படவில்லை.

இதனைடையே அதிமுகவோடு கூட்டணி அமைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி வைத்த நிபந்தனையை ஏற்ற பாஜக தேசிய தலைமை, 2025-ல் நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக நியமித்தது. இதனால் அவர் சட்டமன்றத் தேர்தல் பணிக் குழுவில் இருந்தும் விலக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவர் மறுத்துவிட்டார். இதே காலகட்டத்தில், கோவையில் 14 ஏக்கர் நிலம் வாங்கி ஆர்கானிக் மற்றும் டைரி பார்மிங் தொடங்கினார். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த 'ஸ்டான்போர்ட் இந்தியா கான்பரன்ஸ்' நிகழ்வில் ஸ்பீக்கராகப் பங்கேற்றார். 'அரபி' என்ற கன்னடப் படத்திலும் நடித்தார். புதிய தலைவர் நயினார் நாகேந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க, அண்ணாமலை மீண்டும் காலணி அணியத் தொடங்கினார்.

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையால் வழங்கப்பட்ட 6 தொகுதிகளின் பொறுப்பில் இருந்து விலகினார். மேலும், இந்தத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், ஆனால் NDA கூட்டணிக்காகத் தீவிரப் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அறிவித்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு த.வெ.க மீது விமர்சனங்களை முன்வைத்த அண்ணாமலை தற்போது பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பை விட்டும் விலகியிருக்கிறார். இன்று (05-06-2026)புதிய அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.