கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதமர் மோடி ரோடுஷோ பிரசாரம் - திரளாக கூடிய பொதுமக்கள்

BJP News

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதமர் மோடி ரோடுஷோ பிரசாரம் - திரளாக கூடிய பொதுமக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று உற்சாகமான ரோடு ஷோவின் மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழக தேர்தல் களத்தில் இறங்கியுள்ள பாஜக, இந்த மாவட்டத்தில் தனது கூட்டணியுடன் வலுவான முன்னிலை பெறும் நோக்கில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி (BJP) போட்டியிடுகிறது. மேலும், ஒரு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் தாமரை சின்னத்தில் போட்டியிட, மற்றொரு தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் களமிறங்கியுள்ளது. இக்கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பிரதமர் மோடி நேரடியாக களமிறங்கி பிரச்சாரம் செய்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

நரேந்திர மோடி இன்று புது தில்லியில் இருந்து திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் வந்த அவர், ஆயுதப்படை மைதானத்தில் இறங்கினார். பின்னர் கார் மூலம் வேப்பமிடு காமராஜர் சிலை சந்திப்புக்கு சென்றார்.அங்கு தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர், அதனைத் தொடர்ந்து ரோடு ஷோவை தொடங்கினார். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த ரோடு ஷோ, வடசேரி பகுதியில் அண்ணாதுரை சிலை அருகே நிறைவடைந்தது. 

பிரதமர் மோடியுடன் திறந்த ஜீப்பில் எடப்பாடி பழனிச்சாமி, நைனார் நாகேந்திரன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களை நோக்கி பிரதமர் கையசைத்து ஆதரவு கோரினார்.

ரோடு ஷோ முடிந்ததும், அண்ணாதுரை, எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்ஜிஆர்), பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்த அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் பிரதமர் மோடிக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து வரும் 18ஆம் தேதி கோவை நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு நாகர்கோவில் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெல்லியில் இருந்து வந்த உயர் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை கண்காணித்தனர். சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன், முக்கிய பகுதிகள் அனைத்தும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்த ரோடு ஷோ மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தனது தேர்தல் பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.