பனை,உப்பு தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரம் உயர பாடுபடுவேன் - தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி பேட்டி
ADMK Election news
நான் வெற்றிபெற்றால் விவசாயிகள் உப்பளத் தொழிலாளர்கள், பனைத்தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரம் உயர பாடுபடுவேன் என்று தூத்துக்குடி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சிவசாமிவேலுமணி விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிவசாமிவேலுமணி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அவருக்கு, முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டசெயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட செயலாருமான கடம்பூர் செ.ராஜூ, முன்னாள் அமைச்சரும், மாவட்ட வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது வேட்பாளர் செய்தியாளர்களிடம் பேசினார், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழிஎம்.பி தூத்துக்குடி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. விழாக்களில் மட்டுமே கலந்துகொண்டு விளம்பரம் தேடி வருகிறார். நான் இந்த தொகுதியில் வெற்றிபெற்றால் விவசாயிகள், உப்பளத் தொழிலாளர்கள், பனைத்தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரம் உயர பாடுபடுவேன். மேலும் தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ளம் காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வேன். தூத்துக்குடி மாநகர மக்கள் ஆண்டுதோறும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை சீர்செய்ய ஏற்பாடு செய்வேன். எனக்குஎதிராக போட்டியிடுபவர்களை 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்’ என்றார். பின்னர் தூத்துக்குடியிலுள்ள அனைத்து தலைவர்கள் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் அ.இ.அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்றனர்.