சோனியா, ராகுலுக்கு எதிரான நேஷனல் ஹெரால்ட் வழக்கு - நீதிமன்ற உத்தரவு என்ன?
Congress News
காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, லோக்சபா எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக நேஷனல் ஹெரால்ட் வழக்கின் குற்றப்பத்திரிக்கையை டெல்லி Rouse Avenue சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிக்கையை, ஏ.ஜே.எல்.,எனப்படும், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்கிற நிறுவனம் நடத்தி வந்தது. நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்தை, 50 லட்சம் ரூபாய்க்கு. யங் இந்தியன்ஸ் என்ற நிறுவனம் வாங்கியது. யங் இந்தியன்ஸ் நிறுவனத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா, அவரது மகன் ராகுல் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் இந்த நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ளனர். ஏ.ஜே.எல்.நிறுவனத்தின் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரிக்கும் வகையில், இந்த பரிவர்த்தனை நடந்ததாக, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் ஸ்வாமி 2014ல் வழக்கு தொடர்ந்தார். இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, 2021 முதல் அமலாக்கத்டுறை விசாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த வழக்கில் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று(16.12.2025)இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு: போலீஸ் போன்ற விசாரணை அமைப்புகள் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில், அமலாக்கத்துறை இவ்வழக்கை பதிவு செய்யவில்லை. எப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கையும் பதியப்படவில்லை. அமலாக்கத்துறை சார்பில் இதுவரை நடந்த விசாரணை என்பது தனிநபர் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே நடந்துள்ளது. எனவே அமலாக்கத்துறையின் குற்றப் பத்திரிக்கையை ஏற்க முடியாது. அதை நிராகரிக்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, காங்கிரஸ் எம்.பி ராகுல் உட்பட 6 பேர் மீது டில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் 30ல் புதிதாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர். அது தொடர்பான விசாரணை முடிந்த பின், இவ்வழக்கில் புதிதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் தகவல்களை பகிர்ந்து, அந்த குற்றம் தொடர்பாக விசாரிக்குமாறு மற்றொரு சட்ட அமலாக்க முகமையை கோர அமலாக்கதுறைக்கு முழு உரிமை இருக்கிறது. அந்த வகையில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டால், பணமோசடி விசாரணையை தொடர்வதற்கான முகாந்திரம் அமலாக்கத் துறைக்கு ஏற்பட்டு விடும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே எதிர் கட்சிகளுக்கு எதிராக அரசு துறையை பாஜக தவறாக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றசாட்டுவதோடு, தீர்ப்பில் வெற்றி கிடைத்துவிட்டதாக கூறி மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த வழக்கு விசாரணை வேறு வடிவத்தில் வரப்போகிறது அவ்வளவுதான்.
nadunilai.com