முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை நீர் தேங்கவில்லை.! - சபாஷ் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்..!!
Rain News
பருவமழை மட்டுமில்லாமல், கோடை மழை பெய்தால் கூட தூத்துக்குடி நகர் தண்ணீரில் மிதக்கிறது என்று செய்தி வெளிவருவது வழக்கம். அத்தகைய நிலைமை மாற்ற வேண்டும் என்று தீவிராமாக செயல்பட்டு வெற்றி கண்டிருக்கிறார் தற்போதைய மேயர் ஜெகன் பெரியசாமி. ஆமாம், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் தூத்துக்குடி மாநகரில் மேற்கொள்ளப்பட்ட மழை நீர் வடிகால் பணிகளால் சாலைகளில் தேங்கிய மழை நீர் 3 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டது என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ள தகவலே அதற்கு சாட்சி.
தூத்துக்குடி மாநகரில் வடகிழக்கு பருவமழை துவங்கிய முதல் நாளான நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று காலை வரை கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு, குருஸ் பர்னாந்து சிலை, பாளை ரோடு அரசு ஊழியர் சங்கம் எதிரில், 3வது மைல் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது. இதனை அடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் அதிகாரிகளுடன் அதிகாலை 5 மணி முதல் ஒவ்வொரு பகுதியாக நேரில் சென்று பார்வையிட்டு தேங்கியுள்ள மழைநீரை வடிகால் வழியாக வெளியேற்றுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் பலனாக சுமார் 3 மணி நேரத்தில் முக்கிய சாலைகளில் தேங்கியிருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டு சகஜநிலைக்கு திரும்பியது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
இது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று முன் தினம் இரவு முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. முதல்நாளிலேயே தூத்துக்குடி மாநகரில் 6 செ.மீ அளவிற்கு மழை கொட்டி தீர்த்தது. இதில் பாளை ரோடு, ரயில்வே ஸ்டேசன் ரோடு போன்ற முக்கிய சாலைகளில் தேங்கியிருந்த மழை நீர் உடனடியாக அருகில் இருந்த வடிகால்களுக்கு திருப்பிவிடப்பட்டு மழை நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.
இந்த பகுதிகளில் முன்பெல்லாம் பத்து நாட்கள் வரை மழை நீர் தேங்கி நிற்கும். ஆனால் மாநகராட்சி எடுத்த துரித நடவடிக்கையால் 3 மணி நேரத்தில் மழைநீர் வடிந்து விட்டது. சில இடங்களில் கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரி செய்யப்பட்டு வருகிறது. நான்கு மண்டலத்திலும் 5 வார்டுக்கு ஒரு டிவிஷன் பிரிக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகாரிகள் உள்ளனர். மூன்று வார்டுகளுக்கு ஒரு சுகாதார அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மழை நீர் தேங்கியுள்ள பகுதியில் லாரி மூலம் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் அதிகாரிகள் தொடர்ந்து செயல்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். பி.என்.டி காலனி பகுதியில் பல மாதங்களாக மழை நீர் தேங்கி இருக்கும். தற்போது பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால் ஒரு சில இடங்களில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது. ஒரு மணி நேரத்தில் அங்கும் தண்ணீர் இல்லாமல் சரி செய்யப்படும். பிஎம்சி பள்ளி முன்பு உள்ள சாலை கடந்த முறை மழை நீரில் தத்தளித்தது. இந்த முறை அங்கு எதுவும் தண்ணீர் இல்லை அதிக மழை பெய்தால் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் மழைநீர் முழுவதும் வெளியேற்றப்படும்.
கடந்த 30 ஆண்டுகளாக மழை பெய்தால் 45 நாள் வரை தண்ணீர் தேங்கி இருக்கும். முத்தம்மாள் காலனி, ரஹ்மத்து நகர், மடத்தூர், தனசேகர் நகர் ஆகிய பகுதிகளில் தற்போது எங்கும் மழைநீர் இல்லை. எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்கியுள்ளோம். பொதுமக்கள் பயமில்லாமல் இருக்கலாம். 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காது. நேற்று முன் தினம் இரவு முதல் பெய்த கனமழையால் சில பகுதிகளில் தேங்கிய மழைநீரும் 3 மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டது. மாநகரில் 12 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. அங்கு டாக்டர்கள் பணியில் உள்ளனர். நாளை முதல் மருத்துவ முகாம் நடைபெறும் என்றார். ஆய்வின் போது ஆணையர் ப்ரியங்கா, உதவி பொறியாளர்கள் பிருந்தா, லெனின், ஜெயபிரகாஷ், சுகாதார ஆய்வாளர்கள் ப்ரீத்தி, தீனதயாளன், ராம்குமார், மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் உடன் இருந்தனர்.
nadunilai.com