இணைப்புக்கு உதவுங்கள் - டிடிவியிடம் சிபாரிசு கேட்கும் ஓ.பன்னீர்செல்வம்

ops

இணைப்புக்கு உதவுங்கள் - டிடிவியிடம் சிபாரிசு கேட்கும்  ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அக்கட்சியில் ஏற்பட்ட அதிகார மாற்றங்களும் உட்பிளவுகளும் தமிழக அரசியலில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. ஜெயலலிதா காலத்தில் இடைக்கால முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) நியமிக்கப்பட்ட நிலையில், அதன்பின்னர் சசிகலா தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் எடப்பாடி பழனிச்சாமி (இபிஎஸ்) முதலமைச்சராக பொறுப்பேற்றார். காலப்போக்கில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியும் இபிஎஸ் கையில் நிலைபெற்றது.

இந்த அரசியல் மாற்றங்களின் தொடர்ச்சியாக, ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு, அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனை எதிர்த்து, “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு” என்ற அமைப்பை உருவாக்கி, நீதிமன்ற வழியாக சட்டப் போராட்டம் நடத்தி வருவதாக ஓபிஎஸ் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தேர்தலை சந்திக்கவுள்ள சூழலில், தங்களையும் அந்தக் கூட்டணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை ஓபிஎஸ் முன்வைத்துள்ளார். குறிப்பாக, இபிஎஸ்ஸுடன் கடும் எதிர்ப்பில் இருந்த டிடிவி தினகரன், தற்போது பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், “எதிரும் புதிருமாக இருந்த டிடிவி தினகரனும் இபிஎஸ்ஸும் ஒன்றிணைந்திருக்கும்போது, நாங்களும் ஒன்றிணைய தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். “எங்களையும் இணைத்தால் அதிமுக வெற்றி பெறும்” என்கிறார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “டிடிவி தினகரன், இபிஎஸ்ஸிடம் பேசி எங்களையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துக் கொள்ள வலியுறுத்த வேண்டும்” என வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் அவர் பேசுகையில், ஊடகங்களில் வதந்திகளாக வெளியாகும் செய்திகளை நிறுத்த வேண்டும். நீதிமன்ற வழியாக அதிமுக தொண்டர்களின் உரிமையை மீட்பதே தங்களின் நோக்கம். புதிய கட்சி தொடங்குவது அல்லது தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டதை நினைவூட்டிய ஓபிஎஸ், “வெறும் 15 நாட்கள் மட்டுமே நான் பிரச்சாரம் செய்தேன். என்னை தோற்கடிக்க திட்டமிட்டு பலர் களமிறக்கப்பட்டனர். தொண்டர்கள் எங்கள் பக்கம் இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க செயற்கை சூழ்ச்சி செய்யப்பட்டது” என குற்றம்சாட்டினார்.
தேனி மாவட்டம் அதிமுக வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற மாவட்டம் என்றும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்த மாவட்டம் என்றும் குறிப்பிட்ட ஓபிஎஸ், “தமிழகத்தில் உள்ள 88 மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என்னுடன் இணைந்து போராடி வருகிறார்கள். பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைவதே எங்களின் தலையாய கோரிக்கை” என்றார்.
திமுகவில் இணைவதாகவும், இரண்டாவது தர்மயுத்தம் தொடங்கியதாகவும் வெளியாகும் செய்திகளை அவர் கடுமையாக மறுத்தார். “ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடாது” என்று கூறிய ஓபிஎஸ், “அதிமுக மீண்டும் ஒன்றிணைய நான் ரெடி. டிடிவி தினகரனும், இபிஎஸ்ஸும் ரெடியா?” என்று கேள்வி எழுப்பினார்.

ஓபிஎஸ்ஸின் இந்த அறிவிப்பு, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக–பாஜக கூட்டணிக்குள் புதிய அரசியல் கணக்குகளை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஒன்றிணைப்பு நடந்தால், அதிமுக அணியின் வாக்கு வலிமை அதிகரிக்கலாம்; மறுபுறம், கட்சியின் உள் அரசியல் மேலும் தீவிரமடையும் வாய்ப்பும் உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.