தமிழ்நாடு தலைசிறந்த மாநிலமாக உருவாக வேண்டும் – பொங்கல் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

Geethajeevan

தமிழ்நாடு தலைசிறந்த மாநிலமாக உருவாக வேண்டும் – பொங்கல் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி, தை.03(17.01.2026)

தமிழகத்தில் மக்கள் வாழ்வாதாரம் உயர்வதோடு, தமிழ்நாடு நாட்டின் தலைசிறந்த மாநிலமாக வளர வேண்டும் என்ற இலக்குடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருவதாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகரின் 16-வது வார்டு தபால் தந்தி காலணி மக்கள் நல மன்றம் மற்றும் ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து, தை பொங்கல் திருநாளை முன்னிட்டு நடத்திய பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிய பின்னர் அவர் உரையாற்றினார்.

அவர் பேசுகையில்,“தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல், திராவிட மாடல் ஆட்சியில் சமத்துவ பொங்கலாக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவாக மாறியுள்ளது. சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி சகோதரத்துவமும் அன்பும் வளர்க்கும் வகையில் இவ்விழா கொண்டாடப்படுவது பெருமைக்குரியது. இதில் கலந்து கொண்ட அனைவரையும் மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்” என்றார்.

மேலும்,மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக விடுபட்ட பயனாளிகளுக்கும் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் மகிழ்ச்சியை முதன்மையாகக் கொண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. இதனை எதிர்க்கட்சிகளும் பாராட்டும் நிலை உருவாகியுள்ளது என்றார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில், 2008-ஆம் ஆண்டு ஊராட்சிகளாக இருந்த முள்ளக்காடு, முத்தையாபுரம், சங்கரபோதி, அத்திமரப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்னர், 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அந்த பகுதிகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பின், மாநகராட்சி பகுதிகளின் வளர்ச்சிக்காக பல்வேறு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, புதிய தார் சாலைகள், மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தூத்துக்குடி மாநகரம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

“எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் செயல்படும் இந்த ஆட்சியில், தமிழ்நாட்டில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஒற்றுமையுடன் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் யார் என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும். அதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும். திமுக அரசுக்கு அனைவரும் ஆதரவு அளித்து, மீண்டும் தளபதியாரை ஆட்சியரியனையில் அமரச் செய்ய உறுதி எடுக்க வேண்டும்” என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

“சூரிய ஒளி அனைவருக்கும் ஒளியாக உதிப்பது போல, உங்கள் வாழ்க்கையும் உயர வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதுபோல், அனைவருக்கும் நல்ல வழி பிறக்கட்டும்; சமத்துவம் மலரட்டும்” என அவர் உரையை நிறைவு செய்தார்.

இந்த விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், கவுன்சிலர் கண்ணன், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, வட்டப் பிரதிநிதி பாஸ்கர், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மணி, அல்பர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.