தூத்துக்குடி தொகுதியில் அதிமுக டெபாசிட் இழக்க வேண்டும் - பொங்கல் விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி சூளுரை
N.P.Jegan
தூத்துக்குடி, தை.03(17.01.2026)
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் அதிமுக உள்ளிட்ட எந்தக் கட்சி வேட்பாளரானாலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் டெபாசிட் இழக்க வேண்டும் என, திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகர மேயருமான ஜெகன் பெரியசாமி சூளுரையிட்டார்.
தமிழர் திருநாளான தை பொங்கல் திருநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர 20-வது வார்டு வட்ட திமுக சார்பில் நந்தகோபாலபுரம் என்.பெரியசாமி நினைவு திடலில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழா மற்றும் கொடியேற்ற விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் கவுன்சிலரும் வட்டச் செயலாளருமான ரவீந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பிரதிநிதி நாராயணன், அவைத் தலைவர் அற்புதராஜ், மாநகர வணிக அணி அமைப்பாளர் பாலமுருகன், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் பாக்கியத்துரை, ஆதிதிராவிட நல அணி தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் அணி துணைத் தலைவர் பெரியசாமி வரவேற்புரையாற்றினார்.
வார்டு நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர், தனது வார்டில் தேர்தல் பரப்புரையை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், “தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல், திராவிட மாடல் ஆட்சியில் சமத்துவ பொங்கலாக மாற்றப்பட்டுள்ளது. சாதி, மத பேதமின்றி சகோதரத்துவமும் அன்பும் வளர்க்கும் விழாவாக இன்று பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்ட அனைவரையும் மனமார பாராட்டுகிறேன்” என்றார்.
2021-ஆம் ஆண்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற காலகட்டம் கொரோனா இரண்டாம் அலையின் மிகக் கடுமையான காலம் என்றும், ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு உள்ளிட்ட பல சவால்களை நேரில் சந்தித்த போதும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர், மக்கள் நலனுக்காக அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கியதாக நினைவூட்டினார்.
மேலும், பால்விலை ரூ.3 குறைக்கப்பட்டதுடன், மகளிர் உரிமைத்தொகை திட்டம் இரண்டாம் கட்டமாக விடுபட்டவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. இதனை மத்திய பாஜக அரசே பாராட்டும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
2008-ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஊராட்சிகளாக இருந்த முள்ளக்காடு, முத்தையாபுரம், சங்கரப்போதி, அத்திமரப்பட்டி, தூத்துக்குடி ரூரல் பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்னர், 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அந்த பகுதிகளில் புதிய வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், அதற்கு தீர்வு காணும் எண்ணம் கூட அவர்களுக்கு இல்லை என்றும் மேயர் கடுமையாக விமர்சித்தார்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, மாநகராட்சி பகுதிகளின் வளர்ச்சிக்காக பல்வேறு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, புதிய தார் சாலைகள், மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தூத்துக்குடி மாநகரம் வேகமான வளர்ச்சி அடைந்துள்ளதாக அவர் கூறினார்.
தமிழகத்தில் மக்கள் வாழ்வாதாரமும் உயர வேண்டும்; தமிழ்நாடு தலைசிறந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்ற நோக்குடன் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அடிப்படையில் செயல்படும் இந்த ஆட்சியில், தமிழ்நாட்டில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஒற்றுமையுடன் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் யார் என்பதை எதிர்க்கட்சிகளுக்கு மீண்டும் காட்ட வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழக்க வேண்டும் என்றும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்த வரலாறை, 2026-இலும் மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். “சூரிய ஒளி உலகத்திற்கெல்லாம் வெளிச்சம் தருவது போல, ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பிரகாசமாக அமைய வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதுபோல், அனைவருக்கும் நல்ல வழி பிறக்கட்டும்; சமத்துவம் மலரட்டும்” என அவர் உரையை நிறைவு செய்தார்.
இந்த விழாவில் திமுக வட்டச் செயலாளர் முனியசாமி, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, பகுதி பிரதிநிதிகள் ஜேஸ்பர், பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, வட்ட பிரதிநிதிகள் செந்தில்வேல், ராஜா, ராமமூர்த்தி, பெரியவேல்துரை, பொருளாளர் இசக்கி, துணைச் செயலாளர்கள் கணேசன், மல்லிகா, காளிமுத்து, இளைஞர் அணி நிர்வாகிகள் சிவசுந்தர், ஜான்ஸ்டாலின், பாலமுருகன், ராஜ்குமார், சுரேந்திரகுமார், விஜயகுமார், சக்திவேல், வசந்தகுமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
nadunilai.com