கனிமொழி எம்.பி. பேச்சுக்கு தூத்துக்குடி பாஜக தலைவர் சித்ராங்கதன் கடும் கண்டனம்
DMK - BJP
தூத்துக்குடி,தை.3(17.01.2026)
சென்னையில் நடைபெற்ற ‘சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி எம்.பி., பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசுகையில், “தேர்தல் நேரத்தில் மட்டும் பொங்கல் கொண்டாடி நடிப்பவர்கள் தான் பிரதமர் மோடியும், பாஜகவினரும். தேர்தல் முடிந்தவுடன் தமிழர்கள், தமிழ் மொழி, தமிழ்நாடு குறித்து எந்த அக்கறையும் காட்டாதவர்கள்” என குற்றம்சாட்டினார்.
மேலும், தில்லியில் பிரதமர் மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் ‘பராசக்தி’ திரைப்படக் குழுவினரை அழைத்திருந்தது அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே என குறிப்பிட்ட கனிமொழி, “தேர்தலுக்கு தேர்தல் மட்டும் தமிழைப் பற்றிய அக்கறை இருப்பது போல நடிப்பவர்கள், ஒருபுறம் இந்தி திணிப்பை முன்னெடுப்பதும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மறுப்பதும் தான் உண்மை” என குற்றம்சாட்டினார். திரைப்பட தணிக்கை வாரியத்தையும் மத்திய அரசு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக கூறிய கனிமொழி, “கருணாநிதியின் ‘பராசக்தி’ படம் கூட பல தடைகளை கடந்து தான் வெளியானது. இன்று சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்று தணிக்கை வாரியமும் பயன்படுத்தப்படுகிறது” என்றும் விமர்சித்தார்.
இந்த கருத்துகளுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “பொங்கல் என்பது அரசியல் நாடகமல்ல. அது தமிழர்களின் உயிரோடு கலந்த பாரம்பரிய விழா. பாரதிய ஜனதா கட்சி தேர்தல் காலத்தில் மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் விவசாயிகளின் உழைப்பை மதித்து பாரம்பரிய விழாக்களை கொண்டாடி வருகிறது. விவசாயிகள் நலனுக்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி’, பயிர் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நேரடி பயன் வழங்கி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் மேலாண்மை திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன, விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்காததால் நெல் உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கான தீர்வுகளை மக்களவை உறுப்பினர் கனிமொழி இதுவரை மேற்கொண்டதாக தெரியவில்லை.
மேலும், அரசு நெல் கொள்முதல் முறையாக நடைபெறவில்லை, கொள்முதல் மையங்களில் காலதாமதம், எடை குறைவு, விவசாயிகளுக்கு பணம் வழங்குவதில் தாமதம், உரத் தட்டுப்பாடு காரணமாக விவசாய பணிகள் முடங்கியுள்ளன என்று குற்றம்சாட்டிய அவர், “விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, சமூக நீதி குறித்து பேசும் கனிமொழி, திமுக ஆட்சியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாததையும், தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சி போதிய அளவில் இல்லாததையும் முதலில் பரிசீலிக்க வேண்டும்” என சித்ராங்கதன் கூறினார்.
தமிழ் மொழி, பண்பாடு குறித்து பேசும் கனிமொழி, மத்திய அரசு தமிழுக்கு வழங்கும் நிதி, செம்மொழித் தமிழ் வளர்ச்சி, உலக அளவில் தமிழை எடுத்துச் செல்லும் முயற்சிகள், இவற்றை பற்றி மௌனம் காக்கிறார் என குற்றம்சாட்டிய அவர், “கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் லாபத்திற்காக கூறப்பட்டவை. அவை உண்மை நிலவரத்திற்கு முற்றிலும் மாறானவை” என்றும், “தேர்தல் களத்தில் நேரடியாக வாருங்கள். யார் நாடகமாடுகிறார்கள் என்பதை தீர்மானிக்க மக்கள் காத்திருக்கிறார்கள்” என்றும் சித்ராங்கதன் சவால் விடுத்துள்ளார்.
nadunilai.com