தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா – பல்வேறு அரசியல் பிரிவினர் உற்சாக கொண்டாட்டம்
M.G.R
தூத்துக்குடி : தை-3 (17.01.2026)
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 109வது பிறந்த நாள் விழா இன்று தூத்துக்குடி மாநகரம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதிமுக, ஓபிஎஸ் அணி, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரிவுகள் சார்பில் அவரது திருவுருவப் படங்கள் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள், நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்பட்டது.
தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் விழா
தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் டூவிபுரத்தில் உள்ள தெற்கு மாவட்ட அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், மத்திய வடக்கு பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் ஏற்பாட்டில் மத்திய வடக்கு பகுதி அலுவலகத்தில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் 1ம் கேட், 2ம் கேட் பகுதிகளில் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் படங்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.
முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் நிகழ்ச்சி
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. டூவிபுரம், சிவன் கோவில் அருகில், பழைய மாநகராட்சி முன்பு உள்ள எம்.ஜி.ஆர் சிலை, மட்டக்கடை, திரேஸ்புரம் அழகேசபுரம், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருவுருவப் படங்கள் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் சில்வர்புரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லம், வாகை குளத்தில் உள்ள அலெக்ஸ் கைலாஸ் முதியோர் இல்லம் ஆகிய இடங்களில் மதிய உணவு வழங்கப்பட்டது. அதேபோல் கட்சியினர் 200 பேருக்கு வேஷ்டி, சேலைகளும் வழங்கப்பட்டன.
ஓபிஎஸ் அணி சார்பில் கொண்டாட்டம்
ஓபிஎஸ் அணியின் சார்பில் எம்.ஜி.ஆர் 109வது பிறந்த நாள் விழா மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்ட அலுவலகம் முன்பு கேக் வெட்டி, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் சத்திரம் பேருந்து நிறுத்தம் மற்றும் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விழா கொண்டாடப்பட்டது.
அமமுக சார்பில் மரியாதை
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) சார்பில், பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவின்படி மாவட்ட செயலாளர் ஐனியேல் சாலமோன் மணிராஜ் தலைமையில் பழைய மாநகராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டன.
எம்.ஜி.ஆருக்கு பொதுமக்கள் மரியாதை
இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள், பல்வேறு அணி நிர்வாகிகள், மகளிர் அணி, இளைஞரணி, தொழிற்சங்க நிர்வாகிகள், கவுன்சிலர்கள், வழக்கறிஞர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
எம்.ஜி.ஆர் மக்களுக்காக செய்த சமூக நலத்திட்டங்கள், ஏழை எளிய மக்களுக்கான அவரது பங்களிப்புகள், தமிழ்நாட்டு அரசியலில் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து பலரும் நினைவுகூர்ந்தனர். தூத்துக்குடி மாநகரம் முழுவதும் எம்.ஜி.ஆர் புகழ் முழங்க, அவரது பிறந்த நாள் விழா உற்சாகமாக நிறைவு பெற்றது.
nadunilai.com