தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது - ஜி.கே.வாசன் வருத்தம்

G.K.Vasan

தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது - ஜி.கே.வாசன் வருத்தம்

தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்பார்த்ததைவிட அதிகம் வெற்றி பெறும் என்றும், தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் என்று தெரிவித்தார். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியா முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவம். கேரள முதல்வர் இந்தியா கூட்டணி இல்லை என்று உறுதிப்படுத்தி உள்ளார்.  இதற்கு காரணம் இது தேர்தலுக்கான ஒரு அமைப்பு என்று தெளிவுபடுத்தி உள்ளார்.  தலைமையில்லாத முதன்மையான கூட்டணி நாட்டின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் ஒருபோதும் நம்பிக்கை அளிக்க முடியாது. 

தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. போதை பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய அரசாக செயல்பட இந்த அரசு தவறிவிட்டது. சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் தொடர்ந்து சீர்கெட்டு போய்க் கொண்டிருக்கிறது. இளைஞர்கள் தவறான பாதைக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.  அரசு விழித்துக் கொள்ள வேண்டும். பள்ளிகள் கல்லூரிகள் துவங்குவதற்கு முன் போதை பொருள் நடமாட்டத்திற்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.பறவை காய்ச்சலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும்.  

மேகதாதுத அணை குறித்து சர்வ சாதாரணமாக அறிக்கையை கர்நாடகா முதல்வர் பத்திரிக்கையாளர்களிடம் வெளிப்படையாக பேசுவது மிகவும் வேதனைக்குரிய ஒன்று.  தமிழகத்தில் இங்கு டெல்டா பகுதி பாலைவனம் ஆகிவிடும். நம்முடைய விவசாயிகளுக்கு பயிர் பிரச்சனை மட்டுமல்ல உயிர் பிரச்சனை. ஆட்சியாளர்கள் எந்தவித ஆக்ரோஷமான பதிலையும் எதிரொலிக்கவில்லை. இது கூட்டணி அரசியல். வாக்கு வங்கிக்காக விவசாயிகள் பக்கம் ஆட்சியாளர்கள் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம் 

பிரதமரும் மத்திய அரசும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் இந்தியா என்ற அடிப்படையில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என்ற அடிப்படையில் பிரிவுகள் பார்க்காமல் நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றனர். அம்பேத்கரின் அரசியல் சட்டத்தை பின்பற்றுவது மத்திய அரசியல் வழிபாடாக வைத்துள்ளது. 

நான் அமைச்சராக இருந்தபோது தூத்துக்குடி துறைமுகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.பாஜகவை பொருத்தவரை தங்கு தடை இன்றி ஒரு காலத்திற்குள் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பல இடங்களில் அதிகரித்துள்ளது. வாக்கு சதவீதம் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும் நம்பிக்கை உள்ளது என்றார்.  

அப்போது அவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், வடக்குமாவட்ட தலைவர் ராஜகோபால், மாநில செயலாளர் சார்லஸ், மாவட்ட மகளிரணி தலைவர் தங்கத்தாய், சாயர்புரம் நகர தமாக தலைவரும், சாயர்புரம் பேரூராட்சி முன்னாள் தலைவருமான எடிசி தினகரன், வட்டாரதலைவர்கள் சுந்தரலிங்கம், முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.