கிராமங்களை மாநகராட்சியுடன் இணைத்து கிராம மக்களை வரிச்சுமைக்குள் தள்ள வேண்டாம் - நாம் இந்தியர் கட்சி

Thoothukudi city

கிராமங்களை மாநகராட்சியுடன் இணைத்து கிராம மக்களை வரிச்சுமைக்குள் தள்ள வேண்டாம் - நாம் இந்தியர் கட்சி

இந்திய அளவில் தூத்துக்குடி முக்கிய நகராக மாறிக் கொண்டிருக்கிறது. ஏற்றுமதி, இறக்குமதி, பாதுகாப்பு அம்சங்களுக்கு தேவையான சாலை, ரயில், விமான வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அவைகளுக்கெல்லாம் வசதியாக தூத்துக்குடி மாநகராட்சி எல்லை விரிவாக்கம் பணிகளும் நடைபெற உள்ளதாம். அதனால் தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதியில் கிராம ஊராட்சிகள் பல மாநகராட்சி எல்லைக்குள் வர உள்ளது என்கிறார்கள்.   

இந்த நிலையில் கிராமங்களை மாநகராட்சியுடன் இணைத்து கிராம மக்களை வரிச்சுமைக்குள் தள்ள வேண்டாம் என்று நாம் இந்தியர் கட்சியின் மாநிலத்தலைவர் என்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கை :   

தூத்துக்குடி நகராட்சியாக 100 ஆண்டுகள் இருந்தது. பின்பு மாநகராட்சியாகி சுமார் 15 ஆண்டுகள் கடந்துள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்தும் போது தூத்துக்குடி நகரை சுற்றியுள்ள வீடுகள் அதிகம் கொண்ட பஞ்சாயத்து பகுதிகள் மாநகராட்சியோடு சேர்க்கப்பட்டது. தரம் உயர்த்தப்பட்டு புதிதாக சேர்க்கப்பட்ட பகுதி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, கழிவுநீர் கால்வாய்கள்,ரோடுகள், மின் விளக்கு போன்ற பணிகள் நடைபெற்று வந்தாலும் இதுவரை அது முழுமை பெறவில்லை. இந்த சூழ்நிலையில் மேலும் சில கிராமங்களை மாநகராட்சியின் கீழ் கொண்டுவருவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக செய்தி வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு சொத்துவரி, கட்டிடவரி, காலிமனைவரி போன்றவற்றை மக்களால் எளிதில் செலுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் காலிமனைகளை வாங்க, விற்கமுற்படும் போது பத்திர பதிவின் புதிய நடைமுறை சிக்கல்களால் எளிதாக பத்திரம் பதிவு செய்ய முடியவில்லை. வீடு கட்ட கட்டிட அனுமதி காலதாமதம் போன்ற சூழ்நிலையில் மாநகராட்சி பகுதியில் வீடுகட்டி குடியிருப்பதை விட தங்கள் கிராமத்தில் வீடுகட்டி குடியிருப்பதையே ஓட்டப்பிடாரம் மற்றும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதி மக்கள் விரும்புகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக அந்த எண்ணத்தில்தான் அவர்கள் இருக்கிறார்கள். 

மேலும் கிராமங்களில் வாழும் மக்களிடம் விளம்பரம் மூலம் முழுமையாக கருத்து கேட்பு இல்லாமல் கிராமத்திற்கு கீழ் வரும் வரைபடத்தை வைத்து அதிகாரிகள் அளவில் ஆணை பிறப்பித்து மாநகராட்சி பகுதி என்று அரசு சட்டம் இயற்றி மக்களின் மீது வரிச்சுமையை  ஏற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.