கேரளாவில் 29 கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா - நேரலை ஏற்பாடுகள் தீவிரம்
isha news
ஆன்மீக உலகின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஈஷா மஹாசிவராத்திரி விழா, இந்த ஆண்டு கேரள மாநிலம் முழுவதும் உள்ள 29 முக்கிய கோவில்களில் நேரடி ஒளிபரப்புடன் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஈஷா அறக்கட்டளையின் கேரள மாநில தன்னார்வலர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தின் ஆதியோகி வளாகத்தில், வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி, சத்குரு முன்னிலையில் நடைபெற உள்ள பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா, கேரள மக்களும் நேரடியாகப் பங்கேற்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள 29 கோவில்களில் பெரிய திரைகள் மூலம் நேரலை செய்யப்பட உள்ளது.
இதில் குறிப்பாக 12 கோவில்களில், விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ‘ருத்ராட்ச தீட்சை’ வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தீட்சை, ஆன்மீக வளர்ச்சிக்கும் மன அமைதிக்கும் வழிகாட்டும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
கோயம்புத்தூர் ஆதியோகி முன்பு நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழா, உலக அளவில் அதிகமான மக்களால் ஒரே நேரத்தில் காணப்படும் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டு விழா சுமார் 24 மொழிகளில், 100-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் பல்வேறு இணைய தளங்கள், சமூக ஊடக தளங்கள் மூலம் உலகம் முழுவதும் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது. இதன் மூலம் 14 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த விழாவைக் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹாசிவராத்திரி இரவில், ஆன்மீக ரீதியாக மிக முக்கியமான மஹாமந்திர உச்சாடனங்கள், சக்திவாய்ந்த தியானங்களையும் சத்குரு நேரடியாக வழிநடத்த உள்ளார். மேலும், பக்தர்கள் இரவு முழுவதும் விழிப்புடன் இருந்து ஆன்மீக அனுபவத்தை ஆழமாக உணர உதவும் வகையில், பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார கலை நிகழ்வுகள் இடம்பெற உள்ளன.
இதுகுறித்து ஈஷா தன்னார்வலர்கள் கூறுகையில், “கேரளாவில் உள்ள பக்தர்கள், கோவைக்கு செல்ல முடியாத நிலையிலும், தங்களுக்கருகிலுள்ள கோவில்களிலேயே கூடி, மஹாசிவராத்திரியின் புனித இரவின் ஆற்றலை நேரடியாக அனுபவிக்கும் அரிய வாய்ப்பாக இது அமையும்” என்றனர்.
ஆன்மீக விழிப்புணர்வு, மன அமைதி மற்றும் உள்நிலை மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட இந்த விழாவில், கேரள மாநிலம் முழுவதும் பக்தர்கள் திரளாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
nadunilai.com