எய்ம்ஸ், ரயில்வே திட்டங்கள் தாமதம் : தமிழக அரசே காரணம் என்கிறது மத்தியரசு
Train News
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது பயன்பாட்டிற்கு வரும், தமிழகத்தில் ரயில்வே திட்ட பணிகள் ஏன் விரைந்து முடிக்கப்படவில்லை என்பன உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக, அதன் கூட்டணி கட்சியினர் மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்த விமர்சனங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
மத்திய அரசு தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்றும், மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் பயன்பாட்டிற்கு வராததற்கும் மத்திய அரசே காரணம் என்றும் தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதமும் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், மாநில அரசின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசிய அண்ணாமலை, “எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அதற்கு தேவையான அடிப்படை ஏற்பாடுகள், குறிப்பாக நிலம், சாலை, மின்சாரம், குடிநீர் போன்ற வசதிகளை ஏற்படுத்துவதில் தமிழக அரசு கடும் தாமதம் செய்துள்ளது. இந்த திட்டம் விரைவில் முடிந்து விடக்கூடாது என்பதுபோல மாநில அரசு இழுத்தடித்து வந்ததன் விளைவாகவே எய்ம்ஸ் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை” என குற்றம்சாட்டினார்.
மேலும், “எய்ம்ஸ் கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கு தமிழக முதல்வர் அல்லது அமைச்சர்கள் யாராவது ஒருமுறையாவது நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்களா?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
ரயில்வே திட்டங்கள் தொடர்பாக விளக்கம் அளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ், “தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலத்தில் 24 சதவீதம் மட்டுமே இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4,326 ஹெக்டேர் நிலத்தில் 1,052 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தி தந்துள்ளது. நிலம் கையகப்படுத்துவதற்காக தமிழக அரசுக்கு மத்திய அரசு ஏற்கனவே 1,465 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ரயில்வே திட்டங்கள் தாமதமாகுவதற்கு நிதி பற்றாக்குறை காரணமல்ல. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே முக்கிய காரணம். மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடி புதிய பாதைக்கு 91 சதவீத நிலம் இன்னும் கையகப்படுத்தி தரவில்லை. அதேபோல் திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை புதிய பாதைக்கு 86 சதவீத நிலம் வழங்கப்படவில்லை. ராமேஸ்வரம் – தனுஷ்கோடி புதிய பாதைக்கு 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் இதுவரை நிலம் கையகப்படுத்தப்படாமல் திட்டம் தொடங்கப்படவில்லை. ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் எந்த திட்டமாக இருந்தாலும், அதற்கான நிலம் கையகப்படுத்தி வழங்குவது மாநில அரசின் பொறுப்பு. ஆனால் அந்த பணிகளில் தமிழக அரசு காலதாமதம் செய்து வருகிறது.
இந்த சவால்களுக்கிடையிலும், தமிழகத்தில் பல புதிய ரயில் பாதைகள், இரட்டை பாதை, மூன்றாம் மற்றும் நான்காம் பாதை திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 77 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2014 முதல் 139 கிலோமீட்டர் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 97 சதவீத ரயில்வே வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகள் முடிந்துள்ளன. 9 வந்தே பாரத் ரயில்களும், 9 அமிர்த் பாரத் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழக ரயில்வே உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு முழுமையாக தயாராகவும் உறுதியாகவும் உள்ளது. ஆனால் இந்த திட்டங்களை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்க்க மாநில அரசின் நேர்மையான ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியம். அது முறையாக கிடைக்காததால் தான் தாமதம் ஏற்படுகிறது” என அமைச்சர் கூறினார்.
இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வராதது, ரயில்வே திட்டங்கள் தாமதம் ஆகியவற்றுக்கு மத்திய அரசே காரணம் என மாநில அரசு குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது அந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து விளக்கங்களும் பதில்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன. தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த விவகாரங்கள் அரசியல் களத்தில் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
nadunilai.com