பிரதமர் மோடியை டெஸ்ட் டியூப் பேபி என்பதா ? - நடிகர் பிரகாஷ்ராஜுக்கு கண்டனம்
Modi - Prakashraj
தாம் சார்ந்துள்ள கொள்கைக்கு மாறான கொள்கையையை அவ்வளவு எளிதில் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. அப்படித்தான் நடிகர் பிரகாஷ்ராஜ், இந்திய பிரதமர் மோடியையும், அவர் சார்ந்த பாஜக கட்சியையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அவர் எந்த கொள்கையை ஆதரிப்பவர் என்று வெளிப்படையாக தெரியவில்லை, ஆனால் பாஜக, இந்துத்துவாவை எதிர்க்கும் கொள்கையாளர் என்பதை மட்டும் அவர் செயலில் இருந்து பார்க்க முடிகிறது. அவரின் அதிகப்படியான கோபம், பிரதமர் மோடியை டெஸ்ட் டியூப் பேபி என்று விமர்சிக்கும் அளவிற்கு சென்றிருக்கிறது. சமீபத்தில் தன்னை கடவுளின் அவதாரம் என்கிற அர்த்தத்தில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிராகத்தான் இவருக்கும் இப்படியொரு கோபம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் (25.05.2024) சென்னையில் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவிற்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். விசிக நிர்வாகிகள், கூட்டணி கட்சி பிரமுகர்கள், நடிகர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அந்த விழாவில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசும்போது, உடம்புக்கு ஒரு காயம் ஏற்பட்டால் அது காணாமல் போய்விடும். ஆனால், ஒரு சமுதாயத்துக்கோ, ஒரு நாட்டுக்கோ காயம் ஏற்பட்டால் அதைப்பற்றி நாம் பேசாமல் இருந்தால் அந்த காயம் இன்னமும் அதிகமாகிவிடும். எங்களைப் போன்ற ஒரு கலைஞனை மேடையேற்றிய மக்களுக்கு ஒரு பிரச்னை ஏற்படும் போது அதைப் பார்த்துக் கொண்டு கோழையாக இருந்துவிட்டால் அந்த சமுதாயமே கோழையாகிவிடும். நான் கொண்டிருப்பது வேலை இல்லை. அது என்னுடைய கடமை. ஒரு குரலை ஒடுக்க வேண்டுமென்று நினைத்தால் அதைவிட ஆழமான குரல் எதிரொலிக்கும் என்பதாலேயே கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து பேசி வருகிறேன். தன்னை தெய்வ மகன் என்று ஒருவர்(மோடி) சொல்லிக் கொள்கிறார். அவர் தெய்வமகன் அல்ல, டெஸ்டியூப் பேபி ஆவார். மன்னரை பார்த்து பயப்படுபவன் நான் அல்ல. எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்று பேசியிருக்கிறார்.
சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் பிரகாஷ்ராஜ், அவருடைய கொள்கை அவரை இப்படியெல்லாம் பேசவைக்கிறது. பெரிய மலையுடன் மோதி, அரசியல்வாதியாகிவிடலாம் என்று நினைக்கிறார் போல் தெரிகிறது. சினிமாவில் அவர் வெற்றி பெறுவதுபோல், அரசியலில் அவர் மேற்கொண்டுள்ள கொள்கையில் வெற்றி பெறுவாரா என்பது கேள்வி குறிதான். தற்போதைய இவரின் பேச்சு சமூக வலைதளங்களில் விவாத பொருளாகி உள்ளது. உச்ச பொறுப்பில் இருப்பவரை அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து கண்மூடித்தனமாக விமர்சனம் செய்துவிட முடியாது. எனவே தேர்தல் எல்லாம் முடிந்த பிறகு பிரகாஷ்ராஜ் மீது வழக்குகள் பாயும் என்றே தெரிகிறது. அந்த அளவிற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.