தூத்துக்குடி - சென்னை, பெங்களூருக்கு கூடுதல் விமான சேவை - மீண்டும் வருகிறது ஸ்பைஸ்ஜெட்

AirPort News

தூத்துக்குடி - சென்னை, பெங்களூருக்கு கூடுதல் விமான சேவை - மீண்டும் வருகிறது ஸ்பைஸ்ஜெட்

இந்திய அளவில் தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது தூத்துக்குடி. நவ கைலாயம், நவ திருப்பதி, திருச்செந்தூர் முருகன், குலசை முத்தாரம்மன், பனியம மாதா என ஆன்மிக ஸ்தலங்கள் மற்றும் தொழில்களுக்கு வாய்ப்பாக துறைமுகம், நான்கு வழிச்சாலை என வாய்ப்பு பெற்றுள்ள தூத்துக்குடிக்கு விமான சேவைகள் மிக அவசியமாகியுள்ளது. மக்கள் வளர்ச்சிக்கு உதவும் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம், மிக வேகமாக வளந்து வருகிறது. அதாவது விமானங்களும், அதன் சர்வீஸ்களும் அதிகரித்து வருகின்றன. எதிர்காலத்தில் பெரிய விமானங்கள் வந்து இறங்கும் வகையில் சர்வதேச விமான நிலையமாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது என்கிறார்கள். 

ஏற்கனவே தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ என்ற தனியார் விமான நிறுவனம் மூலம் தினமும் 4 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதே போன்று பெங்களூருக்கு தினமும் ஒரு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் பயணிகள் முழு அளவில் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தூத்துக்குடிக்கு மீண்டும் தனது விமான சேவையை தொடங்க முன்வந்தது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏற்கனவே தூத்துக்குடி- சென்னை இடையே விமான சேவையை நடத்தி வந்தது. கடந்த கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட விமான சேவையை  சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மீண்டும்  தொடங்கியுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மூலம் சென்னைக்கு தினமும் 2 சேவையும், பெங்களூருக்கு ஒரு சேவையும் வழங்கப்படவுள்ளது. 

சென்னையில் இருந்து முதல் விமானம் தினமும் காலை 6 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு காலை 7.40 மணிக்கு வந்தடையும். தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் இந்த விமானம் 9.35 மணிக்கு பெங்களூரை சென்றடையும். பின்னர் பெங்களூரில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்படும் விமானம் காலை 11.45 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.

தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்படும் இந்த விமானம் மதியம் 1.45 மணிக்கு சென்னையை சென்றடையும். பிற்பகல் 2.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானம் மாலை 3.55 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து மாலை 4.55 மணிக்கு புறப்படும் இந்த விமானம் 6.30 மணிக்கு சென்னையை சென்றடையும் என அந்நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்நாளான இன்று தூத்துக்குடி- சென்னை இடையில் 2 விமானங்கள் இயக்கப்பட்டன. 

முதல் விமானம் காலை 6 மணிக்கு பதிலாக 10.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு பகல் 12.18 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வந்து சேர்ந்தது. இந்த விமானம் தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறங்கி ஓடுதளத்தில் வந்த போது இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் விமானத்தின் மீது தண்ணீரை பீச்சியடித்து விமானத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விமானத்தில் 40 பயணிகள் வந்தனர். விமானத்தில் இருந்து முதலாவதாக இறங்கிய பயணியை கொண்டு கேக் வெட்டி ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஏற்கனவே தூத்துக்குடியில் இருந்து இண்டிகோ நிறுவனம் தினமும் 5 முறை சென்னைக்கும், ஒரு முறை பெங்களூருவுக்கும் விமான சேவையை வழங்கி வரும் நிலையில் தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவன் சென்னைக்கு 2 முறையும், பெங்களூருவுக்கு ஒரு முறையும் விமான சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி - சென்னை இடையே தினமும் 7 முறை விமான சேவை கிடைக்கிறது. 

இந்த நிகழ்ச்சியில் விமான நிலைய இயக்குநர் (பொ) பிரிட்டோ, மேலாளர்கள், அபிஷேக், ஜெயராமன் மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து 28 பயணிகளுடன் விமானம் பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு சென்றது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இரண்டாவது விமானம் சென்னையில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு 4.15 மணிக்கு தூத்துக்குடி வந்து சேர்ந்தது. பின்னர் தூத்துக்குடியில் இருந்து 4.55 மணிக்கு புறப்பட்டு சென்றது. முதல் நாளில் பெங்களூரு விமான சேவை நடைபெறவில்லை. நாளை (மார்ச் 31) முதல் அறிவிக்கப்பட்ட அட்டவணை படி அனைத்து விமானங்களும் முறையாக இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.