தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் நாளை(11.10.2023) அதிகாலை முதல் பேருந்துகள் இயக்கம்.!

thoothukudi smart city bus satand

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் நாளை(11.10.2023) அதிகாலை முதல் பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடியில் இயங்கி வந்த பழைய பேருந்து நிலையம்(அண்ணா பேருந்து நிலையம்), ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.58 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

அதனை கடந்த 8ம் தேதி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். நாளை(11.10.2023) முதல்  பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்குவது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் இன்று  ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கலெக்டர் நாளை அதிகாலை முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்பதை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஏற்கனவே பழைய பேருந்து நிலையமாக இருந்த போது இயக்கப்பட்ட நகர பேருந்துகளும், திருநெல்வேலி, திருச்செந்தூர் வரையிலான அனைத்து பேருந்துகளும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. 

மற்றபடி வடக்கு, கிழக்கு மற்றும் தூரத்து வழி செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் சுத்தம், சுகாதாரம் மற்றும் போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் பார்த்துக் கொள்வது, பயணிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகள் அனைத்தும் மாநகராட்சி சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது. முறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை அனைத்து வகையான வாகன ஓட்டிகளும் முறையாக கடைபிடிக்க வேண்டும். கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, பேப்பர் உள்ளிட்ட பொருட்களை ஆங்காங்கே போடுவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டுள்ளார். பொதுமக்களின் கோரிக்கை மற்றும் ஆலோசனைகளை கேட்டு தேவையான மாற்றங்களை செய்து கொடுக்க தயாராக இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். 

நாளை அதிகாலை 4.30 மணி அளவில் கிளம்பும் அரசு பேருந்து முதல் பேருந்து நிலையம் தனது இயக்கத்தை தொடங்குகிறது. மாற்று ஏற்பாடு செய்யும் வரையில் மினி பேருந்துகள் அனைத்தும் தற்போதுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.