ஸ்ரீவைகுண்டம் அருகே 2வது திருமணம் செய்த கணவர் குடும்பத்தினர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு

F.I.R

ஸ்ரீவைகுண்டம் அருகே 2வது திருமணம் செய்த கணவர் குடும்பத்தினர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு

ஸ்ரீவைகுண்டம் அருகே 2வது திருமணம் செய்த கணவர் குடும்பத்தினர் மீது மாவட்ட எஸ்.பி.,உத்தரவின்பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள செய்துங்கநல்லூரை சேர்ந்தவர் முகமது முகைதீன் அப்பாஸ்(வயது 47). இவருக்கும், பாளையங்கோட்டை ரஹ்மத் நகரை சேர்ந்த பாத்திமா ஸபீனா(36) என்பவருக்கும் கடந்த 13.05.2007ம் ஆண்டு சாத்தான்குளத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதியினருக்கு பாத்திமா அதிபா(15), அப்ரின் சுலைஹா(13) என்ற இரண்டு மகள்களும், இம்ரான் மஸ்வூது(8) என்ற ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு, முகமது முகைதீன் அப்பாஸ் துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் கடந்த 2018ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக தனது மனைவியின் நகையை வங்கியில் அடமானம் வைத்து ரூ.81.50லட்சம் கடனாக பெற்றுள்ளார். ஆனால், வங்கியில் அடகு வைத்த நகைக்கான வட்டியை கட்டுவதற்கு முகமது முகைதீன் அப்பாஸ் மறுத்து துபாயிலேயே பணிபுரிந்து வந்துள்ளார்.

இதற்கிடையே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், துபாயில் இருந்து ஊருக்கு வந்த முகமது முகைதீன் அப்பாசுடன் மனைவி பாத்திமா ஸபினாவை கடந்த 2022ம் ஆண்டு உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சேர்த்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 30.07.2022 அன்று இரவில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை முகமது முகைதீன் அப்பாஸ் செய்துங்கநல்லூர் வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார். அதன்பிறகு அவர் தனது மனைவியுடன் சேர்ந்து வாழாத நிலையில், கடந்த மே மாதம் உடன்குடி புதுமனையை சேர்ந்த ஒரு பெண்ணை தனது குடும்பத்தினர் ஆதரவுடன் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இதனையறிந்த அவரது மனைவி பாத்திமா ஸபினா 2வது திருமணம் செய்த தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும், தனது நகைகள், வீடு கட்டுவதற்கு கொடுத்த பணம் போன்றவற்றை திரும்ப தரவேண்டும், வீட்டில் குடியிருக்க கூடாது என்று குடும்ப வன்முறை செய்து வரும் அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்ககோரி கடந்த மாதம் 10ம் தேதி ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பாத்திமா ஸபீனா கடந்த 29ம் தேதி மாவட்ட எஸ்.பி.,அலுவலகத்தில் எஸ்.பி., பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் மனு கொடுத்தார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி., உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று 2வது திருமணம் செய்த முகமது முகைதீன் அப்பாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட மொத்தம் 7பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.