தொழில்நுட்ப ஊழியர்கள் பற்றாக்குறையால் திணறும் தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழகம்
Tnstc news
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களின் சேவைகள் மகத்தானது. கிராமங்களுக்கும், பெரும்நகரங்களுக்கும் இடையே ஆயிரக்கணக்கில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கில் மக்கள் பயனடைகிறார்கள் என்பது உண்மைதான். அதேவேளை, இலவசங்கள், ஆள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் அல்லோலப்பட்டுக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதுபோல் உள்ளூரை தாண்டி, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகளின் சேவையை பாராட்டியே ஆகவேண்டும். தமிழ்நாடு அரசின் பெருமை பறைசாற்றும் வகையில் சிங்கம்போல் வெளிமாநிலங்களுக்கு சென்று கலக்கி வருகிறது அரசு விரைவு பேருந்துகள். இங்கும் ஆள் பற்றாக்குறை அது இது என்று ஏகப்பட்ட பிரச்னை இருக்கிறது என்றாலும் சமீபத்தில் ஓட்டுனர், நடத்துனருக்கு ஆட்கள் எடுத்தார்கள் என்பதால் போக்குவரத்திற்கு பெரும்பாலும் தடை ஏற்படுவதில்லை. அதேவேளை டாக்டர் இருந்தாலும் செவிலியர் இல்லாத மருத்துவமனை போல் இருக்கிறது அரசு விரைவு போக்குவரத்து பணிமனைகள். அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனைகளில் தொழில்நுட்ப பணியாளர்கள் பற்றாக்குறை தலைவிரிதாடுகிறது எனவும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பால் இது குறித்த பிரச்னைகள் வெளியில் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
குறிப்பாக 45 தொழில்நுட்ப ஊழியர்கள் இருந்த தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் 11 தொழில்நுட்ப ஊழியர்கள்தான் இருக்கிறார்களாம். இந்த பணிமனையில் சுமார் 76 பேருந்துகள் இருக்கிறது. தூத்துக்குடியில் இருந்து 30 பேருந்துகளும், திருச்செந்தூரில் இருந்து 10 பேருந்துகளும் சென்னை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு தினசரி இயக்கப்படுகிறது. ஓட்டுனர், நடத்துனர் சுமார் 180 பேர் இருக்கிறார்கள்.
இந்தநிலையில் தொழில்நுட்ப பற்றாக்குறை இருப்பதால் உடனுக்குடன் பழுது பார்க்கும் வேலை நடைபெறுவதில்லையாம். அதனால் செல்ல வேண்டிய இடத்திற்கு உரிய நேரத்தில் பேருந்துகள் செல்ல முடியாமல் பயணத்தடை ஏற்படுகிறதாம். அதேபோல் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது, காலதாமதம் ஏற்படுவது போன்றவற்றால் பொதுமக்களிடம் அவப்பெயர் ஏற்படுகிறது என்று வருத்தம் தெரிவிக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகள், இதன் காரணமாக வருவாய் இழப்பு ஏற்படுகிறது, தொழில் அமைதி கெடுதல் போன்றவற்றில் சிக்க வேண்டியது வருகிறது என்கிறார்கள். இதே நிலை மற்ற பணிமனைகளில் நடக்கிறது என்று கூறமுடியவில்லை என்று தெரிவிக்கும் தொழில் சங்கத்தினர், பக்கத்து பணிமனைகளில் கூடுதலாக உள்ள தொழில்நுட்ப ஊழியர்களை அவ்வப்போதாவது இங்கு வரவழைத்து வேலை செய்ய சொல்லலாம். அதுபோல் சில பணி மனையில் இருப்பதுபோல் குறிப்பிட்ட வேலைகளுக்கு ஒப்பந்தகாரர்களை நியமித்து அவ்வேலைகளை செய்து முடிக்கலாம். இது எதுவுமே செய்யாமல் சமாளிக்கிறார்கள் அதனால் பயணிகளுக்கும், ஓட்டுனர், நடத்துனருக்கும் மிகுந்த மன உளச்சல் ஏற்படுகிறது. இனி வரும் கோடை காலத்தில் விடுமுறையை கழிக்க வெளியிடங்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அப்போது முழுவதும் தயாரில்லாத பேருந்துகளை அதற்கு பயன்படுத்த முடியாது. எனவே தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனைக்கு எதாவது ஒருவழியில் போதிய அளவில் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று தொழில் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
இது குறித்து தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் விளக்கம் அளித்தால் அதனையும் வெளியிட தயாராக உள்ளோம்.