புதுக்கோட்டை புதிய மேம்பாலத்தால் போக்குவரத்து பாதிப்பு - வியாபாரிகளுடன் மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Puducottai Road

புதுக்கோட்டை புதிய மேம்பாலத்தால் போக்குவரத்து பாதிப்பு - வியாபாரிகளுடன் மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது புதுக்கோட்டை.  இந்த ஊரை சுற்றி கூட்டாம்புளி, கூட்டுடன்காடு, குலையன்கரிசல், சேர்வைகாரன்மடம், பேரூரணி, முடிவைத்தானேந்தல் உள்ளிட்ட நிறைய கிராமங்கள் இருக்கின்றன. மேலும், ஊராட்சி ஒன்றிய தலைநகராகவும் புதுக்கோட்டை இருந்து வருகிறது. எனவே இங்கு அன்றாடம் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனர். விமானநிலையம், துறைமுகம் என உள்ள தூத்துக்குடியில் வளர்ந்து வரும் நகராக புதுக்கோட்டை விளங்கி வருகிறது. 

இந்தநிலையில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டு சமீபத்தில் அது திறந்துவிடபட்டிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் என்றாலும் புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராம மக்களுக்கு அது அசெளகரியத்தை கொடுத்து வருகிறது. முன்பெல்லாம் நெல்லை, தூத்துக்குடி இடையே இயக்கப்படும் பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் எளிதில் வந்து சென்றது. தற்போது அதில் இடையூறு ஏற்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மற்றும் சாயர்புரம் வழித்தடங்களில் இருந்து வரும் பேருந்துகள் ஊருக்குள் வந்து  செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதேவேளை, நெல்லை வழித்தடத்தில் வரும் பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்ல வாய்ப்பே இல்லாமல் போனது. இதனால் நெல்லை வழித்தடத்தில் வரும் பேருந்துகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஆட்களை இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிடுகிறது. ஒரு சில பேருந்துகள் மட்டுமே கீழ கூட்டுடன்காடு பகுதி தேசிய நெடுஞ்சாலையில் இறக்கிவிடுகிறது. இதனால் நெல்லை மார்க்கத்தில் வரும் பஸ் பயணிகள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர். தேசிய நெடுஞ்சாலையை கடந்து வெகுதூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. சாலையை கடக்கும்போது விபத்துக்கள் நடந்து வருகிறது. இதெல்லாம் நடக்கும் என்று திட்டம் போட்ட பொறியாளர்களுக்கு எப்படி தெரியாமல் போனது என்று தெரியவில்லை?. 

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசும், அதன் அதிகாரிகளும் நினைத்தால் 
உடனே கூடுதல் வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
. 1) புதிய மேம்பாலத்தை கீழ கூட்டுடன்காடு பகுதியை தாண்டும் அளவில் நீட்டித்து அதில் சப்வே அமைக்க வேண்டும். இது அப்பகுதி மக்கள் சாலையை கடக்க உதவும்.  2) தூத்துக்குடி வழித்தட பேருந்துகள் தற்போது புதுக்கோட்டை ஊருக்குள் செல்லும் முருகன் கோவில் சாலையை அகலமாக்கி அதனை உள்ளே,வெளியே செல்லும் இருவழி சாலையாக மாற்ற வேண்டும். புதுக்கோட்டை ஊருக்குள் இருந்து தூத்துக்குடி வழித்தடத்திற்கு செல்லும் வாகனங்கள் அந்த முருகன் கோவில் வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து அதில் இருந்து வலது புறமாக திரும்பி செல்லும்படி அந்த இடத்தில் ஒரு ரவுண்டனா அமைக்க வேண்டும். 3) புதுக்கோட்டை பழைய பாலத்தை அகற்றிவிட்டோ அல்லது அதன் அருகிலோ ஒரு புதிய பாலத்தை கட்ட வேண்டும். அப்படி புதிய பாலம் கட்டபட்டால் அதையும், அந்த சாலையையும் உள்ளே, வெளியே சாலையாக பயன்படுத்தலாம். இந்த பாலத்தால் தென் பகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் பயனடைவர். புதுக்கோட்டை ஊருக்குள் அனைத்து வாகனங்களும், வந்து செல்ல வசதியாக இருக்கும். இதைத்தான் புதுக்கோட்டை வட்டார பொதுமக்கள் கோரிக்கையாக வைத்து வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில், கோரிக்கையை நிறைவேற்றாத அரசுக்கு ஆதரவு தரப்போறதில்லை என்று கொதிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.     

பொதுமக்களின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை பஜாரில்  அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம், மா.கம்யூனிஸ்ட் கட்சியினர்  பொதுமக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

புதுக்கோட்டை  ஊருக்குள் அனைத்து  பேருந்துகள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், தூத்துக்குடியிலிருந்து  திருநெல்வேலி, திருநெல்வேலியில் இருந்து  தூத்துக்குடி செல்லும் பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்ல  வேண்டும், கீழ கூட்டுடன்காடு, ஐயப்பன் நகர், அய்யனார் காலனி, யூகோ நகர் மக்களுக்கு துணை ஆட்சியர் பேச்சுவார்த்தை அடிப்படையில் புதுகோட்டையில் இருந்து  கீழ கூட்டுடன்காடு செல்லும் நடைபாதை வேலை பணிகளை உடனடியாக துவக்கப்பட வேண்டும், புதுக்கோட்டையில் பல நூற்றாண்டுகளாக உள்ள பழமையான பாலத்தை ஆய்வு செய்து விவசாயிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும், விபத்துகளை தவிர்ப்பதற்கு புதுக்கோட்டை VGR மண்டபம் முதல் ராமச்சந்திரபுரம் வரை புதிய சாலை அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.  

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம் தூத்துக்குடி ஒன்றிய குழு உறுப்பினர் ரவித் தாகூர் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே பி ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரசல், ஒன்றிய செயலாளர் சங்கரன், ஒன்றிய குழு உறுப்பினர் நயினார், மின்சார கமிட்டி ராமையா, விரைவு போக்குவரத்து கமிட்டி பிச்சைமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் பீட்டர் வாழ்த்துரை வழங்கினார். இதில் அப்பகுதி வியாபாரிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதிய மேம்பாலம் ஒன்று கட்டினால் போக்குவரத்து எளிதாகுவதைத்தான் பார்த்திருப்போம். ஆனால் புதுக்கோட்டை புதிய மேம்பாலத்தால் ஊருக்குள் பேருந்துகள் வந்து செல்வது தடைபட்டிருக்கிறது. அப்படியானால் புதிய பாலத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது என்றுதானே அர்த்தம்?