தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து தொடங்கியது

Thoothukudi - Thiruchendur

தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து தொடங்கியது

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17,18 ஆகிய இரண்டு நாட்கள் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிந்தன. சில குளங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலைகளின் குறுக்கே பாய்ந்து ஓடியது. இதனால் தூத்துக்குடி -நெல்லை தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. நேற்று தூத்துக்குடி நெல்லை சாலை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து தொடங்கியது. தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் வரண்டியவேல் விலக்கில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றதால்  கடந்த 18ந் தேதி முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இன்று மாலையில் வெள்ள நீர் குறைந்து விட்டது.மேலும் தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் ஏற்பட்ட சேதங்களும் சீரமைக்கப்பட்டன. இதனால் தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் கடந்த 5 நாட்களுக்கு பிறகு இன்று மாலையில் இருந்து போக்குவரத்து தொடங்கியது. இதனையடுத்து திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி, மதுரை வழித்தடங்களில் பஸ்கள் புறப்பட்டு சென்றன.