மின் கம்பம் நடுவதற்கு பணம் கேட்ட புதுக்கோட்டை இ.பொறியாளர் சஸ்பெண்ட் - வீடியோ வெளியானதை தொடர்ந்து நடவடிக்கை

TNEB

மின் கம்பம் நடுவதற்கு பணம் கேட்ட புதுக்கோட்டை இ.பொறியாளர்  சஸ்பெண்ட்  - வீடியோ வெளியானதை தொடர்ந்து நடவடிக்கை

தூத்துக்குடி அருகே மின்கம்பம் நடுவதற்கு பணம் கேட்டு, மின்வாரிய இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் பேசியதாக  வெளியான வீடியோ ஆதாரத்தை வைத்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக இருப்பவர் தேவசுந்தர்ராஜ். இவர் மின்நுகர்வோர் ஒருவரிடம் மின் கம்பம் நடுவதற்கு பணம் கேட்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அவர் மின்கம்பம் நடுவதற்கு வண்டி வாடகை, வேலையாட்கள் கூலி என ரூ.7 ஆயிரம் செலவாகும். முதலில் வண்டி வாடகை ரூ.2 ஆயிரம் கொடுங்கள் என்று நுகர்வோரிடம் கேட்கிறார். அதற்கு நுகர்வோர், மின்கம்பம் நட்ட பிறகு பணம் தருவதாக கூறுகிறார். அப்போது, இளநிலை பொறியாளர் தேவசுந்தர்ராஜ் கோபத்தில், மின்கம்பங்கள் அங்கேயே இருக்கட்டும், எப்போது மின்வாரிய ஊழியர்கள் வருகிறார்களோ அப்போது கம்பத்தை நடுகிறேன் என்று கூறுவது போன்ற காட்சிகள் உள்ளது. 

இதைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் வெளியான அந்த வீடியோ குறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன்படி முதல்கட்டமாக புதுக்கோட்டை இளநிலை பொறியாளர் தேவசுந்தர்ராஜை சஸ்பெண்ட் செய்து தூத்துக்குடி ஊரக செயற்பொறியாளர் சின்னதுரை உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, இளநிலை பொறியாளர் தேவசுந்தர்ராஜிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.