தூத்துக்குடி நிலா சீ புட்ஸ் ஆலையில் திடீர் விபத்து - 31 பெண் தொழிலாளர்கள் பாதிப்பு - அமைச்சர்கள் நலம் விசாரிப்பு
accident
தூத்துக்குடி மாவட்டம், புதூர் பாண்டியாபுரத்தில் நிலா சீ புட்ஸ் என்கிற பெயரில் மீன் பதப்படுத்தும் ஆலை இருக்கிறது. இங்கு உள்ளூர் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த சுமார் ஐநூறு தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலைபார்த்து வருகின்றனர். அவ்வாறு தங்கியிருக்கும் தொழிலாளர்கள் பலருக்கு நேற்று இரவு 11.30 மணிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது. அங்குள்ள சிலிண்டரில் இருந்து அமோனியா வாயு கசிந்து அறை முழுவதும் பரவியதைத் தொடர்ந்து பலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக முதலில் சொல்லப்பட்டது. இதில் 31 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரிசாசாவை சேர்ந்த தொழிலாளர்கள் 16 பேர், அசாமை சேர்ந்த தொழிலாளார்கள் 2 பேர், தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் 13 பேர். இவர்கள் அனைவரும் 3 மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கபட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மீதி 23 பேரில் ராஜேஷ் திலக் மருத்துவமனையில் 17 பேரும், ஏ.வி.எம். மருத்துவமனையில் 6 பேரும் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
இந்தநிலையில் சிகிச்சைபெற்று வரும் தொழிலாளர்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். மருத்துவர்களிடமும் நிலமை குறித்து விசாரித்தனர்.
அப்போது அமைச்சர் சி.வி.கணேசன், ''தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரத்தில் அமைந்துள்ள மீன் பதப்படுத்தக்கூடிய நிலா சீ புட்ஸ் நிறுவனத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் மின் கசிவு ஏற்பட்டு அதன் மூலமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் காரணமாக புகை மண்டலம் ஏற்பட்டிருக்கிறது. அக்கம்பக்கத்தினர் சத்தம் போட்டதால் தூரமாக ஓடியுள்ளனர். அதிகமாக புகை வரும்போது மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக நிறுவனத்தினர் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் 3 மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து உரிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்று மாலை அல்லது நாளை காலைக்குள்ளாக சிகிச்சை முடிந்து செல்வார்கள். அம்மோனியா வாயு கசிவுக்கு வாய்ப்பு இல்லை. தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் முழுமையாக ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறோம். விசாரணை மேற்கொண்டதில் இந்த நிறுவனத்தில் முறையாக தொழிலாளர்களை பாதுகாத்து வருவதாகவும், விபத்து நடந்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்திருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தினருடன் சேர்ந்து முழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
அதனைத்தொடர்ந்து தொழிற்சாலை முழுவதும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், உதவி காவல் கண்காணிப்பாளர் (தூத்துக்குடி நகரம்) கேல்கர் சுப்பிரமணிய பாலசந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர்கள் ம.பிரபு (தூத்துக்குடி), ஜேன் கிறிஸ்டி பாய் (கோவில்பட்டி), ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் ரமேஷ், இணை இயக்குநர் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்)சரவணன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.