திரெளபதி ‘மோகன் ஜி’ ஜாமினில் விடுதலை : நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய திமுக அரசு

news news

திரெளபதி ‘மோகன் ஜி’ ஜாமினில் விடுதலை : நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய திமுக அரசு

பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தொடர்பாக அவதூறு பரப்பி விட்டார் என திமுக அரசால் கைது செய்யப்பட்டிருந்த சினிமா இயக்குனர் மோகன் ஜியை திருச்சி நீதிமன்றம் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளது. திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இயக்குனர் மோகன் ஜி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிபதி அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

பழனி முருகன் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டது குறித்து கூறிய தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, இந்த விவகாரத்தில் அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று யூடியூப் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

ஆனால் அதனை தவறாக புரிந்துக கொண்ட திமுக அரசு, மோகன் ஜியை பயங்கரவாதியை கைது செய்வது போன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து ரகசியமாக வைத்திருந்தது. இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தது. தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா மற்றும் பாமக கடுமையான கண்டனங்களை தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து திருச்சி நீதிமன்றத்தில் மோகன் ஜியை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது கைது செய்வதற்கான முகாந்திரம் இல்லாத காரணத்தினால் அவருக்கு சொந்த ஜாமினில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அவர் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இயக்குனர் மோகன் ஜி செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது: நம்முடைய பெரும்பாட்டனார் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என ஒரு மாநாடு நடத்தினார்கள். அதில் வந்து கலந்துக்கொண்டு, ஒரு தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்து நானும் அதில் கலந்து கொண்டேன். இதில் இன்னொரு கோரிக்கையாக ராஜராஜ சோழனின் பள்ளிப்படை பற்றியும் அதையும் அங்கீகரித்து ஒரு பெருவிழாவாக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் வைத்துள்ளேன். இது இல்லாமல் தஞ்சாவூர் பல்கலைக்கழகம் சார்பில் 2010ல் ராஜராஜ சோழனின் வரலாறு கொண்ட ஓலைச்சுவடிகளை, தமிழக அரசு சிபிசிஐடி மூலமாக தேனியில் இருந்த சுப்புராஜ் என்பவரிடம் இருந்து கைப்பற்றினர். சுகுமார் என்ற ஆய்வாளர் அதனை கண்டுபிடித்து தகவல் சொல்லியிருந்தார். அதில் முழுக்க ராஜராஜ சோழன் பற்றிய, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி எழுதிய வரலாறு இருக்கிறது.

கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக அந்த ஓலைச்சுவடி எங்கிருக்கிறது, யார் கையில் இருக்கிறது, அது தமிழக அரசு கையில்தான் இருக்கிறதா? என ஆர்டிஐ மூலமாக கேட்டால் கூட எந்தவிதமான பதிலும் இல்லை. இதற்காக பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஓலைச்சுவடி, ஓலைச்சுவடியில் உள்ள ராஜராஜ சோழனின் மறைந்துள்ள வரலாற்றுத் தகவல்கள் வெளியே வரவேண்டும். 14 ஆண்டுகளாகிவிட்டது. அது பற்றிய செய்திகளை தமிழக மக்களுக்கு அரசு சொல்ல வேண்டும் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருப்பதி லட்டு குறித்து ட்வீட் செய்திருந்தேன். நெய்யில் கலப்படம் இருக்கின்றதை ஆய்வறிக்கை நிரூபித்துள்ளது. அதாவது பாமாயில் கலந்துள்ளதை கண்டுப்பிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் விலங்கு கொழுப்பு உள்ளிட்டவைகளை அதில் சேர்த்துள்ளனர். அதில் ஈடுபட்ட அத்துனை பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அதில் ஈடுபட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவை கலைத்துவிட வேண்டும். திருப்பதி என்பது ஆந்திராவுக்கு மட்டுமான கோயிலாக இல்லை. உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கான கோயிலாக உள்ளது. இந்தியாவில் உள்ள ஒரு பத்து மாநிலங்களில் இருந்து உறுப்பினர்களை சேர்த்து ஒரு தேவஸ்தான அறங்காவலர் குழுவை அமைத்து மிக பாதுகாப்பான முறையில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

புனிதமான விஷயங்களில் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுவது கண்டிக்கதக்கது. 300க்கும் மேற்பட்ட ஆண்டுகளை பாரம்பரியமாக கொண்ட லட்டுவை கெடுத்துள்ளனர். மேலும், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கட்டும், ஆனால் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். வருகின்ற தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வாரா என்று எதிர்பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.