சமாளிக்க முடியாத கூட்டங்கள் இனி கூடுவதை தவிர்க்க வேண்டும் - கனிமொழி எம்.பி அட்வைஸ்

news news

சமாளிக்க முடியாத கூட்டங்கள் இனி கூடுவதை தவிர்க்க வேண்டும் - கனிமொழி எம்.பி அட்வைஸ்

வருடம் தோறும் நடைபெறுகிற நிகழ்ச்சியாக இருந்தால் அடுத்தாண்டு பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பார்கள். எப்போதாவது நடைபெறும் நிகழ்ச்சியாக இருந்தால் அதனை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை படுவது இயல்புதானே?.   அந்த வகையில்தான் சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 6ம் தேதி நடைபெற்ற இந்திய விமானபடை சாகசங்களை மக்கள் காண விரும்பினர். ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால் 15 லட்சம் பேர் கூடியிருந்ததாக சொல்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது மக்கள் நெருக்கடியில் சிக்கி தவித்தனர். மனித கூட்டத்துக்கு நடுவே ஆக்ஸிசன் பற்றாக்குறை ஏற்பட்டும், உடலில் நீர் சத்து குறைந்தும் பலர் மயங்கி விழும் நிலை ஏற்பட்டது. அதில் 5 பேர் இறந்தே போனார்கள். 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டது. 

இந்த நிலைக்கு யார் காரணம் என்று பலவாறு குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கின. நிகழ்ச்சிக்கு வந்து செல்ல ரயில் வசதி போதாது என்றும், தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த பேருந்து வசதி போதாது என்றும், சாலையை ஒழுங்குபடுத்த காவல்துறையினர் போதாது என்றும் பலவாறு குற்றசாட்டுக்கள் பறந்தன. இதில் அதிகம் விமர்சிக்கப்பட்டது மாநில அரசுதான். முன்னேற்பாடுகளை சரிவர என்று செய்ய வில்லை என்று களத்தில் நின்று பலரும் கதறியதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் மாநில அரசையே சாடினர். 

இதுக்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக அரசு செய்து கொடுத்திருந்த வசதிகள் பட்டியலை வரிசைபடுத்தி காண்பித்தார். ஆனாலும் அது லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் கேட்க முடியாத வசனம் போலானது. அதுபோலவே கனிமொழி எம்.பியும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்பநிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

கனிமொழி வருத்தம் தெரிவித்திருப்பதெல்லாம் சரிதான், சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனிமேல் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறாரே அது எதுக்கு?. 20 வருடத்திற்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி இப்போது நடைபெறுகிறது என்பதை பார்ப்பதற்கு ஆவலாக மக்கள் வருவது தவறா?. வந்தவர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் தவித்தது தவறில்லையா?. குறிப்பாக மாநில அரசு போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தவறியது தவறில்லையா?. சமாளிக்க முடியாத கூட்டம் என்று எதை வைத்து முடிவு செய்ய முடியும்?. குறிப்பிட்டு இவர்கள்தான் வருவார்கள், இவர்கள் வரமாட்டார்கள் என்று எப்படி பார்க்க முடியும்?.  மாநில அரசு மற்றும் அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் இப்படியொரு பிரச்னை என்றால் இப்படித்தான் ஒரு எம்.பி கருத்து சொல்வாரா?. இந்திய விமானபடை சாகசத்தை இவர் எந்த அளவில் வைத்து பார்க்கிறார்?. அப்படியானால் தமிழக அரசால் சமாளிக்க முடியவில்லையா என்று சமூக வலைளங்களில் கேள்விகளை கேட்டு வறுத்தெடுத்துவிட்டனர். 

எனவே இனிமேலாவது ஒரு எம்.பியாக இருக்க கூடியவர் இந்த வார்த்தையை சொல்லலாமா சொல்ல கூடாதா? என்று யோசித்து பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள் பொது மக்கள்.