சாத்தான்குளத்தில் கல்குவாரி விவகாரத்தில் 20 பேர் மீது வழக்கு பதிவு - பொய் வழக்கு பதிவு என பெண்கள் போராட்டம்
sathankulam
சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் புதிதாக கல்குவாரி ஒன்று தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் அடிக்கடி வெடி வெடிப்பதால் பாதிக்கப்படுவதாக அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்து வந்தனர். அதனை அகற்ற வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர். ஆனாலும் பலன் இல்லை. அதனால் கடந்த மாதம் 200க்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டு நெடுங்குளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கல்குவாரியை மூடுவது குறித்து பேசியிருப்பதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கனிமவளத்துறை அதிகாரிகளும் ஆய்வு நடத்தியிருக்கின்றனர். இந்தநிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு அப்பகுதியில் கல்குவாரி சம்பந்தபட்ட லாரிகள் அந்த வழியாக சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவ்வாறு சென்ற கல்குவாரி லாரியை சேதப்படுத்தியதாக லாரி ஓட்டுநர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் நெடுங்குளத்தை சேர்ந்த அடையாளம் காட்டக்கூடிய 20 நபர்கள் மீது சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர்களை தேடிச் சென்றதாக கூறப்படுகிறது . இதனால் ஆத்திரமடைந்த நெடுங்குளத்தை சேர்ந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் நெடுங்குளத்தில் திடீரென திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பொய் வழக்கு பதிவு செய்ததாக அவர்கள் கூறி கோஷங்கள் இட்டனர் . இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல் ஆய்வாளர் ( பொறுப்பு) அனிதா, உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்துள்ளனர்.