சாத்தான்குளம் - பெரியதாழை இடையே அரசு பேருந்து சேவை வேண்டும் - ஓய்வூதிய சங்கத்தினர் கோரிக்கை
Bus news
சாத்தான்குளத்திலிருந்து பெரியதாழைக்கு அரசு பேருந்து சேவை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ஜெயபால் தலைமையில் வட்டத் தலைவர் தேவசமாதானம், வட்ட துணைத் தலைவர் பாண்டியன், இணைச்செயலாளர் கிறிஸ்டோபர், அரசு ஊழியர் சங்க முன்னாள் வட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற மின் ஊழியர் நல அமைப்பு மாநில துணைத் தலைவர் ஜெய பாண்டியன், ஓய்வு பெற்ற பேரூராட்சி செயல அலுவலர் முருகேசன், ஓய்வு பெற்ற வன ஊழியர் காந்திமதிநாதன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சுடலைக்கண், நெடுஞ்சாலைத்துறை முத்துராமலிங்கம் உட்பட ஓய்வு பெற்ற அலுவலர் சாத்தான்குளம் வட்டாட்சியர் இசக்கிமுருகேஸ்வரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில், சாத்தான்குளம் வட்டத்தில் உள்ள ஒரே கடற்கரை கிராமமான பெரியதாழைக்கு சாத்தான்குளம் வழியாக திருநெல்வேலியிலிருந்து மதியம் ஒரு முறை மட்டும் தனியார் பேருந்து சென்று வருகிறது. பகல் வேளையில் வேறு பேருந்து சேவை எதுவும் இல்லை. வட்ட தலைமையிடமான சாத்தான்குளத்தில் வட்டாட்சியர் அலுவலகம் ,ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மை அலுவலகம் ,அரசு தலைமை மருத்துவமனை ,சார்நிலைக் கருவூலம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இருக்கின்றன. அரசு அலுவல் சம்பந்தபட்ட தேவைகளுக்காக பொதுமக்கள் பெரியதாழையிலிருந்து சாத்தான்குளம் வர வேண்டுமென்றால், உடன்குடி அல்லது திசையன்விளைக்கு சென்றுதான் வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாத்தான் குளத்திலிருந்து முதலூர், பொத்தக்காலன்விளை ,போலையர்புரம் ,தட்டார்மடம், கொம்மடிக்கோட்டை, சொக்கன்குடியிருப்பு,மணிநகர், சுண்டங்கோட்டை, படுக்கப்பத்து வழியாக பெரியதாழைக்கு அரசு பேருந்து சேவை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்துள்ளார்.