நெல்லை - தூத்துக்குடி இடையே கார் - பைக் மோதி விபத்து : தனியார் நிறுவன ஊழியர் பலி
Accident
தூத்துக்குடி அருகே பாளையங்கோட்டை சாலையில் பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
தூத்துக்குடி போல்பேட்டை ஸ்டேட் வங்கி காலனியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் செல்வ சுஜித்(25). இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இன்று(15.07.2024)காலை வழக்கம்போல தனது மோட்டார் சைக்கிளில் திருநெல்வேலிக்கு கிளம்பினார். தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் சாலை பணிக்காக ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ள தெய்வச்செயல்புரம் - பொட்டலூரணி விலக்கு இடையிலான சாலையில் சென்று கொண்டிருந்தார். பொட்டலூரணி விலக்கு அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த காரும், இவரது பைக்கும் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த செல்வ சுஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சுஜித் உடலை கைப்பற்றி உடல் பிரேதபரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.