குடிபோதையில் தவறி விழுந்த மரக்கடை உரிமையாளர் பலி - கூட்டாம்புளியில் சம்பவம்
accident
தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளியில் இன்று(29ம்தேதி) மதியம் டாஸ்மாக் கடை அருகில் குடிபோதையில் தள்ளாடி விழுந்தநபர் பலியான சம்பவம் நடந்துள்ளது.
ஏரல் அருகே கொத்தலரிவிளையை சேர்ந்தவர் பால்பாண்டிநாடார் மகன் சண்முகவேல்(55).இவருக்கு சென்னை, சாலிகிராமம்,முத்தமிழ்நகரில் மரக்கடை இருக்கிறது. கொத்தலரிவிளை கோயில் கொடைவிழாவிற்காக கடந்த 25ம் தேதி ஊருக்கு வந்த தொழிலதிபர் சண்முகவேல், இன்று கூட்டாம்புளி டாஸ்மாக் கடை அருகில் குளத்தங்கரை சுவரில் படுத்திருந்தாராம். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்திருக்கிறார். அப்போது பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி உள்பட புதுக்கோட்டை போலீசார், சண்முகவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில், மது அருந்திவிட்டு சண்முகவேல் அப்பகுதியில் உள்ள குளக்கரை சுவரில் படுத்திருந்ததாகவும், அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்திருப்பதாகவும் தெரியவந்தது. இது குறித்து மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.