விபத்தைத் தடுக்க வைக்கப்பட்ட பேரிகார்டுகளால் விபத்து அபாயமா? தூத்துக்குடி பைபாஸ் சந்திப்பில் சீரமைப்பு தேவை!

N.H.News

விபத்தைத் தடுக்க வைக்கப்பட்ட பேரிகார்டுகளால் விபத்து அபாயமா? தூத்துக்குடி பைபாஸ் சந்திப்பில் சீரமைப்பு தேவை!

பேரிகார்டுகளை அகற்றி வேகத்தடைகள் அமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை — பேருந்து மோதி இருசக்கர வாகன ஓட்டி படுகாயம்

பாதுகாப்பு நடவடிக்கைகளே சில நேரங்களில் விபத்துகளுக்கு வழிவகுத்துவிடுகின்றன. இதற்குச் சான்றாக, தூத்துக்குடி–திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தூத்துக்குடி நகருக்குள் செல்லும் பைபாஸ் சந்திப்புப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகள் அமைந்துள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

தூத்துக்குடி துறைமுகம், திருச்செந்தூர், நகரப் பகுதிகள், சிப்காட், மதுரை, ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள் இந்தச் சந்திப்பைப் பயன்படுத்துகின்றன. இதனால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் வாகனங்களின் குறுக்கீடும் அதிகமாக உள்ளன. வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், விபத்துகளைத் தவிர்க்கவும் பல இடங்களில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை முறையான இடைவெளியின்றிக் குறுக்கும் நெடுக்குமாக அமைக்கப்பட்டிருப்பதால், வாகன ஓட்டிகள் குழப்பமடைவதாகக் கூறப்படுகிறது. பைபாஸ் சாலையில் தெற்கிலிருந்து அல்லது வடக்கிலிருந்து வாகனங்கள் வருகிறதா எனக் கவனித்து, சந்திப்பைக் கடக்க வேண்டிய நிலையில், பேரிகார்டுகளைக் கடப்பதிலும் வாகன ஓட்டிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக, பின்னால் பேருந்து அல்லது கனரக வாகனங்கள் வரும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் பேருந்துகளும் இருசக்கர வாகனங்களும் குறுகிய இடைவெளியில் ஒரே நேரத்தில் பேரிகார்டுகளைக் கடக்க வேண்டியுள்ளது. அப்போது, பேரிகார்டில் மோதாமல் செல்லவும், அருகில் வரும் கனரக வாகனங்களிலிருந்து விலகிச் செல்லவும் முயற்சிக்கும்போது விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

பேருந்து மோதி இருசக்கர வாகன ஓட்டி படுகாயம்

கூட்டாம்புளி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி நகரை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, சுப்பிரமணியபுரம், சாயர்புரம், கூட்டாம்புளி, புதுக்கோட்டை, கோரம்பள்ளம் வழியாகத் தூத்துக்குடி நோக்கிச் சென்ற தனியார் ஆர்.பி.எஸ். பேருந்தும், பெரியசாமியின் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பெரியசாமியின் கால்கள் மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரிகார்டுகளுக்குப் பதிலாக வேகத்தடைகள் அமைக்கலாமே!

துறைமுகம் மற்றும் திருச்செந்தூர் வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே சில இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, தூத்துக்குடி நகருக்குள் நுழையும் பகுதியிலும், நகரிலிருந்து வெளியேறும் பகுதியிலும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பேரிகார்டுகளின் அமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. பேரிகார்டுகளை அதிக அளவில் வைப்பதற்குப் பதிலாக, போக்குவரத்துப் பொறியியல் ஆய்வின் அடிப்படையில் தேவையான இடங்களில் வேகத்தடைகள், தெளிவான சாலைப் பிரிப்புக் குறியீடுகள், திசைவழிப் பலகைகள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகளை அமைக்கலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். 

காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை இணைந்து நடவடிக்கை எடுக்குமா?

விபத்து ஏற்படாமல் தடுப்பதே போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம். ஆனால், அந்த நடவடிக்கைகள் வாகன ஓட்டிகளுக்கு மேலும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தினால், அவற்றை மறுபரிசீலனை செய்வது அவசியமாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட காவல்துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பேரிகார்டுகளைப் பாதுகாப்பான முறையில் மறுசீரமைக்க வேண்டும் அல்லது தேவையற்றவற்றை அகற்ற வேண்டும். இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் பாதுகாப்பாகச் செல்லும் வகையில் போக்குவரத்து வழித்தடங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.

ஏற்கெனவே விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த விபத்து நிகழும் வரை காத்திருக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.