மழைகால முன்னேற்பாடுகளில் தீவிரம் - டெங்கு ஒழிப்பு மருத்துவ குழு தூத்துக்குடி மாநகராட்சியை அலசுகிறது

DHO News

மழைகால முன்னேற்பாடுகளில் தீவிரம் - டெங்கு ஒழிப்பு மருத்துவ குழு தூத்துக்குடி மாநகராட்சியை அலசுகிறது

மழைகாலம் நெருங்குவதையொட்டி டெங்கு ஒழிப்பு மருத்துவ குழு முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். வெயில் காலத்தை தாண்டி காற்றுக்காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்து ஓரிரு மாதங்களில் மழை காலம் வந்துவிடும். மழைகாலம் வந்தாலே கொசுக்கள் மூலம் காய்ச்சல், சலி உள்ளிட்ட நோய்கள்  பரவுவது இயல்பு என்றாலும் அதனை தடுக்கும் பொருட்டு அரசு நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். இதுக்கிடையில் தூத்துக்குடி மாநகராட்சி 26வது வார்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதார அலுவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். 

மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் எஸ்.பொற்செல்வன் மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் எஸ்.வினோத்ராஜா ஆகியோர் 26வது வார்டில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த பகுதியில் கொசுப்புழு உற்பத்தி உள்ளதா எனவும், குடிநீர் தேக்கிவைக்கப்பட்ட தொட்டிகள், குடிநீர் ட்ரம்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளை பார்வையிட்டனர். அப்போது அவர்கள்,  வடகிழக்கு பருவமழை ஆரம்பமாக உள்ளதால் திறந்த நிலையில் உள்ள குடிநீர் தொட்டிகள், சிமெண்ட தொட்டிகள், தண்ணீர், சேமித்து வைக்கும் பாத்திரங்கள் அனைத்திலும் கொசுக்கள் புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் உடைந்த சிமெண்ட தொட்டிகள், பழைய டயர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், டீ கப்புகள், சிரெட்டைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். காலை, மாலை இருவேளைகளிலும் புகைமருந்து அடிக்கப்பட வேண்டும். காய்ச்சல் கண்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ளனரா என ஆய்வு செய்ய வேண்டும். முறையாக குளோரினேசன் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதை சுகாதார ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற நல மையங்கள், அரசு மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் களப்பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.