தூத்துக்குடி அருகே அந்தோணியார்புரத்தில் தொடரும் விபத்துக்கள் - விரைந்து கவனிக்குமா தேசிய நெடுஞ்சாலைத்துறை?
National High Way

கட்டமைக்கப்பட்ட சாலை வசதியே இல்லாத காலங்களில் நடைபயணமே பிரதானமாக இருந்தது. அப்போது மாட்டு வண்டிகளும்,குதிரை வண்டிகளும் போக்குவரத்திற்கு வாகனங்களாக பயன்படுத்தப்பட்டது. அந்த காலங்களில் தனக்குதானே விபத்தோ, எதிரெதிரே மோதி விபத்தோ என்று பெரிய அளவில் சம்பவங்கள் நடந்ததாக தகவல் இல்லை. ஆனால் சாலை வசதிகள், வாகன வசதிகள் என்று ஏக போக வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலத்தில்தான் எதாவது ஒருவகையில் ஏகப்பட்ட விபத்துக்கள் நடந்து வருகின்றன. அதற்கு, தனிமனித கவன குறைவோ அல்லது அரசு நிர்வாக கவன குறைவோ இல்லாமல் வேறு எதுவும் இருக்க முடியாது. வாகனம் ஓட்டுவோரின் உடல்,மனத்திறன், சாலையின் நிலை மற்றும் வாகனத்தின் தரம் ஆகியவற்றை பொறுத்து அமைகிறது சாலை போக்குவரத்து. உடைந்து கரடுமுரடாக உள்ள சாலையில் வேகமாக ஓடக்கூடிய தரமான வாகனம் செல்லும்போது பிரச்னை. இது இரண்டும் நன்றாக இருந்தாலும், போதையில் உள்ளவர்கள், சுகவீனமானவர்கள், மிகவும் துடிப்பான உடல்தகுதி கொண்ட இளைஞர்கள் கரடு, முரடான சாலையில் இயங்குவது அவ்வளவு எளிது அல்ல. அப்படித்தான் சாலை போக்குவரத்தின் நிலை தற்போது இருந்து வருகிறது. ஆங்காங்கே கரடு முரடான சாலைகள், போதையில் வண்டி ஓட்டுவோர், அத்துமீறி வண்டி ஓட்டுவோர் என்பதெல்லாம் தாராளமாக இருக்கிறது. அதனால்தான் ஆங்காங்கே விபத்துக்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதில் எதோ ஒரு காரணத்திற்காகதான் அந்தோணியார்புரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையிலும் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைகள், பாலங்கள், குளக்கரைகள் அடித்துச்செல்லப்பட்ட சம்பவங்கள் நடந்தது. அப்படித்தான் தூத்துக்குடி - நெல்லை தேசியநெடுஞ்சாலையில் உள்ள அந்தோணியார்புரம் பகுதி பாலமும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. இது நடந்து 8 மாதங்கள் கடந்தும் இதுவரை சீரமைக்கப்படவில்லை என்பதுதான் வேதனை. மழை வெள்ள சம்பவங்களே மறந்துபோனவர்கள் இதை பார்த்து மீண்டும் மீண்டும் நினைவு கூரும் நிலை இருந்து வருகிறது. அதெற்கெல்லாம் அங்கு நடந்து வரும் விபத்துக்களே காரணம்.
இப்படியொரு சம்பவம் நேற்று இரவும் நடந்திருக்கிறது. திருச்செந்தூர் பக்கத்தில் உள்ள அடைக்கலாபுரம் ஊரை சேர்ந்த ததேயு மகன் பிரகாஷ், சாயர்புரம் அருகே நடுவைக்குறிச்சியில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது, கோவை செல்லும் சித்தப்பா மகனை வழியனுப்புவதற்காக அவரை தூத்துக்குடிக்கு அழைத்து சென்றிருக்கிறார். பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் நடுவைகுறிச்சி நோக்கி சென்றுள்ளார். அவருடன் உறவினரான டாரிஷ் என்பவரும் இருந்திருக்கிறார். இரவு சுமார் 9.30 மணியவில் அந்தோணியார்புரம் அருகே அவர்கள் சென்றபோது, எதிர்பாராதவிதமாக தூத்துக்குடி-நெல்லை சாலையின் நடுவே உள்ள 20 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்துள்ளது. இதில்,தூக்கி வீசப்பட்டதில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை கிராம மக்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து அப்பகுதியினர், ‘’அந்தோணியார்புரத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையில் சாலை அடித்து செல்லப்பட்டு சுமார் 20 அடி ஆழத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. பின்னர் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் இருபக்கமும் மணல் நிறப்பி தற்காலிக சாலையை உருவாக்கினர். அதன் வழியாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கிறது. கனமழையினால் சாலை அடித்துச் செல்லப்பட்டு 8 மாதங்களுக்கு மேல் ஆகியும், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைக்காததால், அந்த பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. தூத்துக்குடி- நெல்லை நெஞ்சாலை என்பதால் அதிக போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதும், பள்ளத்தில் இருந்து சுமார் 15 அடி தூரத்தில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சரியான மின்விளக்கு வசதி செய்யப்படாததால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு அதில் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விடுகின்றனர். இதுவரை சுமார் 16 பேருக்கு-மேல் இந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும், அதில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் தெரிவிகிறது. எனவே, வாகன ஓட்டிகளுக்கு எச்சரிகை விடுக்கும் வகையில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தும், விரைவில் பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.