இந்திய அளவில் கல்வி பணியில் 3வது இடம் பிடித்த தூத்துக்குடி மாநகராட்சி - மேயர் ஜெகன் பெரியசாமி மகிழ்ச்சி
Thoothukudi Mayor N.P.Jegan
தூத்துக்குடி மாநகராட்சி கல்வி பணியில் இந்திய அளவில் 3வது இடம் பிடித்துள்ளது. இது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
தமிழக முதல்வராக கலைஞர் இருந்தபோது உள்ளாட்சித்துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தார். கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, மீளவிட்டான், சங்கரபேரி, தூத்துக்குடி ரூரல் ஆகிய 5 புறநகர் பகுதிகள் தூத்துக்குடி மாநகராட்சியோடு இணைக்கப்பட்டது. இதன் மூலம் 51வார்டுகளாக இருந்த தூத்துக்குடி நகராட்சி, 60 வார்டுகள் கொண்ட மாநகராட்சியாக தரம் உயர்ந்தது. அதன்மூலம், பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள பெரியநகரங்களில் 10 நகரங்களை தேர்ந்தெடுத்து அதனை ஸ்மார்ட்சிட்டி என்ற பெயரில் சீர்மிகு நகரங்களாக அந்தஸ்தை உயர்த்தியது. அவற்றில் ஒன்று தூத்துக்குடி மாநகராட்சியும் அடங்கும். அதன் மூலம் மாநகராட்சியில் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் ரூ.960 கோடியை ஒதுக்கீடு செய்தது. அதன் மூலம் பொதுமக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பிரம்மாண்டமான வணிக வளாகங்கள், பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் குறிப்பாக, இளம் தலைமுறையினரின் அறிவுத்திறனை வெளிக் கொண்டு வரும் வகையில் அறிவியல் பூங்காக்கள், அறிவுசார் மையங்கள், கல்வி கற்றலில் சிறப்பான பள்ளிக்கட்டிடம், கையடக்க கணினி மூலம் மாணவர்கள் தற்கால நவீன யுக்திகளை மாநகராட்சி 21 பள்ளிகளில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கையாளும் வகையிலான பணிகளை மேற்கொள்ளும் வகையில் சிறப்பான கல்வியினை வழங்கும் பணியினை தூத்துக்குடி மாநகராட்சியானது சிறப்பாக நிறைவேற்றியுள்ளது.
மேற்படி கட்டமைப்புகளை நவீன காலத்திற்கு ஏற்றவாறு நிறைவேற்றியதின் விளைவாக மாணவர் சேர்க்கையானது கடந்த கல்வி ஆண்டைவிட இரு மடங்காக உயர்ந்துள்ளதுடன் குறிப்பாக, மாணவியரின் சேர்க்கை விகிதம் பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்த வகையில், இந்திய அளவில் 100 பெரிய நகரங்களில் சீர்மிகு நகரத்திட்டங்களில் நடைபெற்ற பணிகளுக்கான 2022ம் வருடத்திற்கான போட்டியில் கல்விப் பணியில் சமூக பொருளாதார கட்டமைப்பில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் பாதுகாப்பான கட்டிடம், நூலகம், உணவகம், சீர்மிகு வகுப்பறை, நவீன இருக்கை வசதி, தூய்மையான பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை அடங்கிய சிறப்பான சூழலில் கையடக்க கணினி வசதியுடன் கல்வி கற்பிக்கப்படும் மகத்தான பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு இந்திய அளவில் மத்திய நகர்புற வளர்ச்சி துறை சார்பில் மூன்றாவது பரிசு வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சியானது அடுத்தமாதம் செப்டம்பர் 27 மற்றும் 28ம் தேதிகளில் டெல்லியில் நடைபெறும் மிகப்பெரிய விழாவின் போது இந்திய ஜனாதிபதியால் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி மாநகராட்சியின் கல்வி சேவைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட பணிகள் ஆமை வேகத்தில் அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. நாங்கள் பொறுப்புக்கு வந்தபிறகு மிக்பெரிய மாநகரமாக உள்ள பகுதியில் உலக அளவில் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு உரிய இடமான துறைமுக மாநகரமாக இருப்பதால் அனைத்து தரப்பினர்களும் பலனடையும் வகையில் கட்டமைப்பு வசதிகளை முறைப்படுத்தி 60 வார்டு பகுதிகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளை முறைப்படுத்தி எந்த பணிகளுக்கு முதலில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என்பதில் கவனம் செலுத்தி பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு கடந்த அதிமுக ஆட்சியின் போது எதிர்பாரத வகையில் அதிக அளவில் மழை பெய்த காலத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்த எங்கள் தளபதியார் தூத்துக்குடிக்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட பகுதியான முத்தம்மாள் காலணி, தனசேகரன் நகர், ராம்நகர், பிரையண்டநகர், உள்ளிட்ட சில பகுதிகளை பார்வையிட்டு முறையான கட்டமைப்பு பணிகளை செய்யாதநிலையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. என்று குற்ற சாட்டு கூறியுள்ள நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் தளபதியார் அதே பகுதியை மீண்டும் பார்வையிட்டு இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிலை இந்த பகுதிக்கு ஏற்படக்கூடாது என்று அதிகாரிகள் எங்களை போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுரை கூறியிருந்தார்கள்.
அதனடிப்படையில் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு கால்வாய் மற்றும் சாலை வசதிகள் மற்றும் மாநகராட்சி பகுதியில் 152 பூங்கா இருக்க வேண்டிய இடத்தில் 41 பூங்காக்கள் இருந்தநிலையில் பல்வேறு ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டு புதிதாக வளர்ந்து வரும் எதிர்கால தலைமுறையினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் காலை மாலை இரு வேளையும் நடைபயிற்சி சென்று பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு விளையாட்டுகளுடன் தனசேகரன் நகர் உள்ளிட்ட புதிய பூங்காக்ககள் அமைக்கப்பட்டுள்ளது. பழைய பூங்காக்கள் புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இலகு ரக கனரக வாகனங்கள் இடையூறின்றி எளிதாக செல்வதற்கு என்டூ என்டூ என்ற முறையில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. போதிய மழைய இல்லாத சூழ்நிலையிலும் அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி சீரான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. நான் உள்பட 60 வார்டு மாமன்ற உறுப்பினர்களுக்கும் மாநகராட்சி வளர்ச்சியிலும் பொதுமக்கள் நலனிலும் அக்கறை கொண்டு எதிர்கால தலைமுறையினரின் நலன் தான் முக்கியம் என்ற அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். பல்வேறு தமிழக அரசின் சிறப்பு நிதியின் கீழ் முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க புதிய பணிகளும் மேற்கொண்டு வருகிறோம். ஏற்கனவே மாசு இல்லாத மாநகராட்;சியை உருவாக்குவோம். என்ற அடிப்படையில் மரக்கன்றுகள் பசுமையை உருவாக்கும் வகையில் பல்வேறு இடங்களில் நடப்பட்டு அதை பாராமரித்து வருகிறோம். நெகிழி கழிவுகள் இல்லாத நிலையை உருவாக்கும் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மஞ்சபை திட்டத்தை நடைமுறைப்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தமைக்காக ஒன்றிய அரசின் சார்பில் மாசு இல்லாத மாநகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றிய அரசின் விருதை பெற்றுள்ளோம். இந்நிலையில் கல்வி தரத்தை உயர்த்தியதற்காக தூத்துக்குடி மாநகராட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதற்கு முழு ஓத்துழைப்பு அளித்து இன்று வரை மாநகராட்சியின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு, திமுக துணை பொதுசெயலாளரும் பாரளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகராட்சி அதிகாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், மாநகர மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று மேயர் ஜெகன் பெரியசாமி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.