சொட்டுநீர்ப்பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம்

nazareth news

சொட்டுநீர்ப்பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம்

நாசரேத், ஆக.27- சொட்டுநீர்ப்பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது என்று ஆழ்வை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஆழ்வை வட்டாரத்தில் சுமார் 4 ஆயிரத்து 200 ஏக்கர் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழையின் வாழ்க்கை சுழற்சிக்கு தேவையான மொத்த நீர்த்தேவை 900&1200 மி.மீ ஆகும். இது மழை வாயிலாகவோ அல்லது நீர்ப்பாசன மூலமாகவோ பெறலாம். இதுவரை வெள்ளப்பாய்ச்சல் நீர்ப்பாசன முறையை பின்பற்றி வந்த வாழை விவசாயிகள் இந்த வறட்சியினால் இனி வரும் காலங்களில் இவ்வகையான நீர்ப்பாசன முறையை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வறட்சியை சமாளிக்க விவசாயிகள் நீர்பாசன மேலாண்மை குறித்து சிந்தித்து செயல்பட வேண்டும். நீர்பாசன மேலாண்மை என்பது பயிர்களுக்கு நீர் பயன்பாட்டை கண்காணிப்பதாகும். அதாவது நீரினை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்தலாம் என்றும், நீராவியாகி வீணாகும் நீரினை எவ்வாறு காப்பாற்றலாம் என்பதை உள்ளடக்கியதாகும்.

சொட்டுநீர்ப்பாசனம் அமைப்பதன் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் பயிர் செய்யலாம். சுமார் 70 சதவீதம் நீரை சேமிக்கலாம். மேலும் தண்ணீரில் கரையும் உரங்களை நேரடியாக பயிரின் வேர் பகுதியிலே வழங்குதல், பயிர் ஆரோக்கியமாக லாபம் ஈட்டலாம். மேலும் மண்ணிற்கு மூடாக்கு இடுவதானால் நீர் ஆவியாதலை குறைத்து களைச்செடிகள் வளர்வதையும் கட்டுப்படுத்தலாம். குறைந்த செலவு அல்லது செலவில்லாமல் மூடாக்கு அமைக்க காய்ந்த வாழை இலைகள், சருகுகள் கொண்டு மூடாக்கிடாலம். ஆனால் இதனை மேற்கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டியது மூடாக்கிடும் சருகுகளில் நோய்தாக்கம் இல்லாததனை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் வாழையில் அதிகமாக சிகாடோகா இலைப்புள்ளி நோய் தாக்கம் இருப்பதனால் இதன் பூஞ்சான் வேறு செடிகளுக்கு பரவாமல் பார்த்து கொள்ள வேண்டும். அல்லது பிளாஸ்டிக் மூடாக்கும் பயன்படுத்தலாம்.

வாழையில் நீர் மேலாண்மையினை பின்பற்ற தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தின் மூலம் சொட்டுநீர்ப்பாசனம் அமைத்திட மானியம் வழங்கப்படுகிறது. சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் மூடாக்கு இடுவதற்கு 50 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தகவலுக்கு ஆழ்வார்திருநகரி வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.